போதை பொருள் வழக்கில் முக்கிய குற்றவாளி நாடு கடத்தல்!: சி.பி.ஐ., அதிரடி

மும்பை, ஜூலை 12- மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து, 252 கோடி ரூபாய் மதிப்புள்ள, ‘மெபெட்ரோன்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி குப்பாவாலா முஸ்தபா, மும்பைக்கு நேற்று அழைத்து வரப்பட்டார். மஹாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில், போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின்படி, மும்பை போலீசார் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர். அங்கிருந்து, 126.14 கிலோ எடையுள்ள மெபெட்ரோன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு, 252 கோடி ரூபாய். முக்கிய குற்றவாளி விசாரணையில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் வசித்த, குஜராத்தின் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த குப்பாவாலா முஸ்தபா, 44, அங்கிருந்தபடி, தன் உறவினரும், மற்றொரு முக்கிய குற்றவாளியுமான சலீம் டோலாவுடன் சேர்ந்து, மெபெட்ரோன் போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையை நடத்தியது தெரியவந்தது. மேலும், போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டதுடன், தங்களது நெட்வொர்க் வாயிலாக அதை இருவரும் வினியோகித்தனர். மஹாராஷ்டிரா மட்டுமின்றி குஜராத்தின் பெரும்பாலான இடங்களுக்கும் மெபெட்ரோன் போதைப்பொருளை இருவரும் கடத்தினர். இதில் கிடைத்த பணத்தை, ஹவாலா வாயிலாக வெளிநாடுகளுக்கு அவர்கள் அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், குப்பாவாலா முஸ்தபா, அவரது உறவினர் சலிம் டோலா, அவரது மகன் தாஹர் சலீம் டோலா உள்ளிட்டோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. மேலும் அவர்களுக்கு எதிராக, ‘லுக் அவுட்’ எனப்படும் தேடப்படும் நபர்கள் என்பதற்கான நோட்டீசும் வெளியிடப்பட்டது.
இந்த வழக்கில், தாஹர் சலீம் டோலா, ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து ஜூனில் நம் நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டார். ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ குப்பாவாலா முஸ்தபாவுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், மும்பை போலீசார் மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் கோரிக்கையின்படி, அவருக்கு எதிராக, ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு, ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ வெளியிட்டது. இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சில் முக்கிய குற்றவாளி குப்பாவாலா முஸ்தபாவை, ரெட் கார்னர் நோட்டீஸ் அடிப்படையில் அந்நாட்டு அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். அவரை நம் நாட்டுக்கு அழைத்து வர, கடந்த 7ல், துபாய்க்கு மும்பை போலீசார் சென்றனர். நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் முடிந்ததை அடுத்து, பலத்த பாதுகாப்புடன், மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையத்துக்கு குப்பாவாலா முஸ்தபா நேற்று அழைத்து வரப்பட்டார். அவரை அங்கேயே வைத்து மும்பை போலீசார் கைது செய்தனர்.