
சென்னை: ஜனவரி 1-
நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை கூறினார். போயஸ் தோட்டம் முன்பு அதிகாலை முதல் கூடிய ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகர்கள் தலைவா தலைவா என அழைத்து ஆரவாரம் செய்தனர்.
2025 ஆம் ஆண்டு முடிந்து தற்போது 2026-ஆம் ஆண்டு தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின் போது ரஜினிகாந்தை சந்திக்க ரசிகர்கள் போயஸ் கார்டனுக்கு செல்வது வழக்கம்.
அப்போது ரஜினி ஊரில் இருந்தால் அவர்களை சந்திப்பார். இல்லாவிட்டால் லதா ரஜினிகாந்த் வந்து சந்தித்துவிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்துகளை கூறி, அவர்கள் வந்த விஷயத்தை ரஜினியிடம் கூறுவதாக தெரிவிப்பார். அந்த வகையில் இன்று அதிகாலை முதலே போயஸ் தோட்ட இல்லம் முன்பு ரசிகர்கள் திரண்டனர். இதையடுத்து தகவலறிந்த ரஜினிகாந்த் வெள்ளை நிற வேட்டியில் வெளியே வந்து ரசிகர்களுக்கு கையசைத்தார். ரஜினியை பார்த்ததும் ரசிகர்கள் தலைவா தலைவா என்றும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறியும் ஆரவாரம் செய்தனர். இதையடுத்து ரஜினிகாந்தும் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் ரசிகர்களின் அன்புக்கு நன்றி என தெரிவித்துவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார். இதையடுத்து அங்கிருந்து ரசிகர்கள் கலைந்து சென்றனர்.
கடந்த தீபாவளி பண்டிகைக்கும் ரசிகர்கள் வந்த போது வெளியே வந்த ரஜினி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த நிலையில் அவரது எக்ஸ்வலைதள பதிவில் முத்து படத்தின் ஒரு டயலாக்கை வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.
அதில்,மீனாவிடம் ரஜினி சொல்வது போன்ற டயலாக் அது. மீனா, “போற ரூட்டு கரெக்ட்டுதானே!” என கேட்பார். அதற்கு ரஜினி, “யாருக்கு தெரியும்? நான் எப்பவுமே போற ரூட்டை பற்றி கவலைப்படுறதே கிடையாது. ஆண்டவன் மேல பாரத்தை போட்டுவிட்டு வண்டி எந்த ரூட்டில் போகிறதோ, அந்த ரூட்டில் “சிவா” என சொல்லிவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்! அந்த வீடியோவில் புத்தாண்டு வாழ்த்துகளையும், கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்ற வாசகத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.
வழக்கமாக புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றுதான் ரஜினி பதிவிடுவார். ஆனால் இந்த ஆண்டு புதிதாக போற ரூட்டு கரெக்ட்டா என்பதை யோசிக்கும் வகையில் ஒரு வீடியோ போட்டுள்ளதால் அவர் இதை யாருக்கு பூடகமாக தெரிவிக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.















