
நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் சுற்றில் காங்கோ அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் பதிவு செய்யவில்லை. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்று விளையாடும் 48 அணிகளும் அதன் முதல் ஆட்டத்தில் விளையாடி உள்ளன. பிரிவுக்கு 4 அணிகள் வீதம் மொத்தம் 12 பிரிவுகளாக குரூப் சுற்று நடைபெறுகிறது.
போர்ச்சுகல் vs காங்கோ: அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஹியூஸ்டனில் ‘கே’ பிரிவில் உள்ள போர்ச்சுகல் மற்றும் காங்கோ அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு தகுந்த படியே ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் ஜோவா நெவாஸ், போர்ச்சுகல் அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார். தொடர்ந்து கோல் கணக்கை போர்ச்சுகல் கூட்டும் என கருதப்பட்டது.
இந்த ஆட்டத்தில் கால்பந்து உலகின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடினார்.
அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆட்ட நேரத்தில் சுமார் 75 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது போர்ச்சுகல். அதன் மூலம் சுமார் 769 பாஸ்களை களத்தில் மேற்கொண்டது. இதில் மூன்று ஷாட்களை மட்டுமே ஆன் டார்கெட்டில் போர்ச்சுகல் அணி வைத்தது.
மறுபக்கம் காங்கோவின் தடுப்பாட்டம் அற்புதமாக இருந்தது. அதோடு கிடைக்கும் வாய்ப்பில் அட்டாக்கிங் கேமும் ஆடி அசத்தியது. முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் டைமில் காங்கோ அணி கோல் பதிவு செய்தது. காங்கோ அணிக்காக விஸ்ஸா அந்த அற்புதத்தை நிகழ்த்தினார். அதன் பின்னர் இரு அணியும் கோல் பதிவு செய்யவில்லை. இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
ரொனால்டோ: இந்த ஆட்டத்தில் பந்தை மொத்தம் 25 முறை டச் செய்திருந்தார் ரொனால்டோ. இதில் 19 பாஸ்களை போட்டிருந்தார். பந்தை ஆன் டார்கெட்டை நோக்கி ஒரு ஷாட் கூட அவர் இந்த ஆட்டத்தில் ஆடவில்லை.
41 வயதான அவருக்கு இது ஆறாவது உலகக் கோப்பை தொடராகும். மற்ற அணிகளில் உள்ள நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் ஆகியோர் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் கோல் பதிவு செய்த நிலையில் ரொனால்டோ தனது கோல் கணக்கை தொடங்காமல் உள்ளார். அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணி அளவில் குரூப் ‘எல்’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் விளையாடின. குரூப் சுற்றில் பலம் வாய்ந்த இரண்டு அணிகளின் மோதலாக இந்த ஆட்டம் பார்க்கப்பட்டது. இதன் முதல் பாதி ஆட்டத்தில் 2-2 என இரண்டு அணிகளும் கோல் பதிவு செய்தன. ஆட்டத்தின் முதல் 10 நிமிடத்துக்குள் குரோஷியா அணியின் ஃபவுல் காரணமாக இங்கிலாந்து அணிக்கு பெனால்டி கொடுக்கப்பட்டது. இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் அதற்கு தயாரானார். முதல் வாய்ப்பில் குரோஷியா கோல் கீப்பர் பந்தை தடுத்தார். இருப்பினும் விஏஆர் மூலம் சோதிட்டதில் கோல் கம்பத்தில் இருந்து அவர் முன்னதாகவே வெளியேறியது கண்டறியப்பட்டது. அதனால் ரீடேக் கொடுக்கப்பட்டது. இந்த முறை ஹாரிகேன் கோல் பதிவு செய்தார்.





















