சென்னை: ஆக. 2-
மக்களை சந்தித்தால்தான் எனக்கு உற்சாகம் வரும்; நோய் ஏதாவது இருந்தாலும் நன்றாகிவிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை முதல்வர் தொடங்கி வைத்தார். மருத்துவ வசதிகள் குறைந்த ஊரக பகுதிகள், குடிசை பகுதிகள் உள்ளிட்டவற்றில் முன்னுரிமை அடிப்படையில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் அடுத்தாண்டு பிப்ரவரி வரை நடைபெறும் முகாமில் 17 மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் நடைபெறுகிறது. மக்கள் தொகை 10 லட்சத்துக்கும் குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்கள் நடக்கிறது. மக்கள் தொகை 10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒரு மண்டலத்துக்கு ஒரு முகாம் வீதம் 15 மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
சனிக்கிழமை தோறும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
சனிக்கிழமைதோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறும். முகாமில் இதயம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவும் முகாமில் வழங்கப்படும். முகாமில் அனைத்து பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு மற்றும் பல் மருத்துவ சேவைகள் வழங்கப்படும். மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி வளர்ச்சி குன்றிய குழந்தைகள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை. ரத்தப் பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே, யுஎஸ்ஜி அனைத்து பரிசோதனைகளும் நடத்தப்படும். பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு பரிசோதனை முடிவுகள் உள்ளடக்கிய மருத்துவக் கோப்புகள் வழங்கப்படும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை: மருத்துவமனையில் இருந்தாலும் மக்கள் பணி: மருத்துவமனையில் இருந்தபோதும் அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்திக்கொண்டேதான் இருந்தேன். உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து ஆட்சியர்கள், மக்களுடன் மருத்துவமனையில் இருந்தபடி காணொலியில் கலந்துரையாடினேன். தூத்துக்குடிக்கு வந்த பிரதமருக்கு தமிழ்நாடு மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அனுப்பி வைத்தேன். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தாலும் மக்கள் பணியாற்றினேன். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு நேற்று முன்தினம் தலைமைச் செயலகம் சென்று வழக்கமான பணி செய்தேன்.
மக்களை சந்தித்தால்தான் எனக்கு உற்சாகம்: மக்களை சந்தித்தால்தான் எனக்கு உற்சாகம் வரும்; நோய் ஏதாவது இருந்தாலும் நன்றாகிவிடும். மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு கோட்டைக்கு வெளியே நான் கலந்துகொண்டு பேசும் முதல் நிகழ்ச்சி. நாட்டு மக்கள் நலன்தான் எனது நலன். கொரோனா காலத்தில் நான் உள்பட எல்லோரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்களாக மாறிவிட்டோம். கொரோனாவால் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்று ரூ.4000 உதவித் தொகை கொடுத்தோம். கொரோனா காலத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 தவணைகளாக ரூ.4,000 கொடுத்தோம்.















