
புதுடெல்லி: பிப்ரவரி 13
நாடாளுமன்றத்தில் நடந்ததாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுவது பொய் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 4ம் தேதி மக்களவையில் பிரதமரை சூழ்ந்து கொண்டு காங்கிரஸ் எம்.பி.க்கள் தாக்க திட்டமிட்டனர் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார். இந்நிலையில் மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் அவைத் தலைவர் ஓம் பிர்லா அறைக்குள் சென்று வாக்குவாதம் செய்தது ஆகிய வீடியோக்களை மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.
மேலும், 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறைக்குள் நுழைந்து அவரை அவதூறாகப் பேசி மிரட்டியதாக கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி நேற்று கூறியதாவது:
சபாநாயகர் ஓம் பிர்லா அறைக்குள் சென்ற நாங்கள் யாரையும் திட்டவில்லை. 2 எம்.பி.க்கள் மட்டும் கிளர்ந்தெழுந்தனர்.
அவர்கள் அதை வெளிப்படுத்தினர். நான் அவர்களை ஊக்குவித்ததாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகிறார். இது முழுக்க முழுக்க பொய். நான் அமைதியாக அமர்ந்திருந்தேன்.
இறுதியில், நான் சில விஷயங்களை அமைதியாகச் சொன்னேன். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக வழக்குகள் தொடருதல் உள்ளிட்ட அனைத்தையும் அவர்கள் செய்வார்கள்.
ஆனால் எதுவும் ராகுல் காந்தியை பாதிக்க போவதில்லை. இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.
















