
புதுடெல்லி: ஜூலை 23 சட்ட மசோதாக்கள் மீது ஆளுநரும், குடியரசுத் தலைவரும் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக கிடப்பில் போட்டதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 8 அன்று பிறப்பித்த உத்தரவில். “தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்காமல். அவற்றை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்தது சட்டவிரோதம். அந்த 10 மசோதாக்களும் உடனடியாக சட்டமாக்கப்பட்டு, அமலுக்கு வந்துவிட்டன. மறுநிறைவேற்றம் செய்து அனுப்பிவைக்கப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாதங்களிலும் முடிவெடுக்க வேண்டும்” என காலக்கெடு நிர்ணயம் செய்து தீர்ப்பளித்தனர்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த மே 13-ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 143-ஐ பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை எழுப்பி, விளக்கம் கோரி கடிதம் அனுப்பியிருந்தார்.
குடியரசுத் தலைவரின் இந்த கடிதம் வழக்காக விசாரணைக்கு ஏற்கப்பட்டு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் சந்துர்கர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது குடியரசுத் தலைவரின் இந்த விளக்கம் கோரும் கடிதத்தை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்று, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும், கேரளாவை ஆளும் இடது ஜனநாயக முன்னணி சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலும் ஆட்சேபம் தெரிவித்தனர்.