
புதுடெல்லி, ஜன. 26- “நமது இந்தியச் சமூகம் மலேசியாவில் கலாச்சாரம், பண்பாட்டை போற்றி வருகின்றனர். அங்கு 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன’’ என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) 130-வது வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றியதாவது: எனதருமை நாட்டு மக்களே… நாளை 26-ம் தேதி இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை சிறப்பாகக் கொண்டாடுகிறோம். இந்த தினத்தில்தான் அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பெருந்தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவோம். இன்றைய தினம் (ஜன.25) கூட சிறப்பு வாய்ந்த நாள்தான். இன்றுதான் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டு, ஆண்டுதோறும் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பான தினத்தில் 18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்களுக்கு ஒன்று சொல்கிறேன். வழக்கமாக 18 வயதை அடையும் போது வாழ்க்கையில் அதுவும் ஒரு சாதாரண நிகழ்வாக கருதப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த வயது ஒரு மைல்கல்.தேர்தல் ஜனநாயக செயல்பாடுகளில் முதல் முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவாக இருப்பவர்கள் வாக்காளர்கள். நமது இந்தியச் சமூகம் மலேசியாவில் கலாச்சாரம், பண்பாட்டை போற்றி வருகின்றனர். அங்கு 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன.












