Home மாவட்டங்கள் பெங்களூர் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

மண்டியா, ஆகஸ்ட் 30- கர்நாடகாவில் தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி பகுதிகளில் பரவலாக மழை பெய்ததன் காரணமாக, குடகு மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 48 மி.மீ. மழை பதிவானது. இதனால் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மைசூருவில் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி 2,272.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5,110 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 8,260 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 108.80 அடியாக (மொத்த அடி 124.80) உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 7,995 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 6,872 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் 3,000 கன அடி நீர் மைசூரு மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்காக கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது.