
புதுடெல்லி: ஜனவரி 23-
இந்தியாவின் மின் விநியோகக் கட்டமைப்பு 5 லட்சம் சர்க்யூட் கிலோமீட்டர் எனும் மைல்கல்லைக் கடந்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இது குறித்து மத்திய மின் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நாட்டின் மின் விநியோகக் கட்டமைப்பு, 220 கிலோவோல்ட் மற்றும் அதற்கும் அதிகமான உயர் அழுத்த மின்சாரத்தைக் கொண்டு செல்லும்
திறன் கொண்ட 5 லட்சம் சர்க்யூட் கிலோமீட்டரை கடந்துள்ளது. மேலும், மின் மாற்றும் திறன் 1,407 ஜிகாவோல்ட் ஆம்பியராக அதிகரித்துள்ளது.
ராஜஸ்தான் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலத்திலிருந்து மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்காக,
பத்லா-II முதல் சீகர்-II துணை மின்நிலையம் வரை 765 கி.வோ. திறன் கொண்ட 628 சர்க்யூட் கி.மீ. மின் விநியோகப் பாதை பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து இந்த சாதனை
மைல்கல் எட்டப்பட்டது.
1,100 மெகாவாட் இந்த மின்பாதை பயன்பாட்டுக்கு வந்ததன் மூலம், பத்லா, ராம்கர் மற்றும் பதேகர் சூரிய சக்தி வளாகங்களில் இருந்து கூடுதலாக 1,100 மெகாவாட் மின்சாரத்தை விநியோகிக்க முடியும்.
கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை, நாட்டின் மின் விநியோகக் கட்டமைப்பு 71.6 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் 2.09 லட்சம் சர்க்யூட் கி.மீ. நீளத்திற்கு மின் விநியோகப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மின் மாற்றும் திறன் 876 ஜிகாவோல்ட் ஆம்பியர் உயர்ந்துள்ளது.
தற்போது பிராந்தியங்களுக்கு இடையேயான மின் பரிமாற்றத் திறன் 1,20,340 மெகாவாட்டாக உள்ளது.
இது ‘ஒரே தேசம் – ஒரே மின்கட்டமைப்பு – ஒரே அலைவரிசை’ என்ற தொலைநோக்குப் பார்வையை வெற்றிகரமாக நனவாக்கியுள்ளது.













