
பெங்களூரு, ஜூலை 10-
பெங்களூரு பியாடரஹள்ளி அருகே உள்ள பரத் நகர் பகுதியில் நேற்று அதிகாலை சிறுத்தை ஒன்று உலா வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வன அதிகாரிகள், பட்டாசுகளை வெடித்து சிறுத்தையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், சிறுத்தை எங்கு சென்றது என்று கண்டுபிடிக்க முடியாமல் போனது.
வனத்துறையினரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தப்பிய சிறுத்தை, நேற்று இரவு 9 மணிக்கும், இன்று அதிகாலை 4 மணி அளவிலும் அதே பகுதியில் மீண்டும் தில்லாக உலா வந்துள்ளது. சிறுத்தை ராஜநடை போட்டு சுற்றும் இந்த பரபரப்பான காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, அப்பகுதி மக்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது.
பரத் நகர் பகுதி முழுவதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர பயந்து நடுங்குகின்றனர். குழந்தைகளை வெளியே அனுப்ப பெற்றோர்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகள் வெளியானதை அடுத்து, வனத்துறையினர் இன்று காலை முதல் சிறுத்தையைத் தேடும் அதிரடி வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தேடுதல் வேட்டையில் சிறுத்தை சிக்காவிட்டால், முக்கிய இடங்களில் கூண்டு வைத்து அதைப் பிடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


















