
வாஷிங்டன், ஜூன் 27- அமெரிக்க நிறுவனங்கள் வழங்கும் டிஜிட்டல் சேவைகள் மீது வரி விதிக்கும் எந்தவொரு நாடும், அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளுக்கு 100 சதவீத வரியைச் செலுத்த நேரிடும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். பெரிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களைக் குறிவைத்து, பல ஐரோப்பிய நாடுகள் புதிய டிஜிட்டல் சேவை வரிகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். அவர் கூறி இருப்பதாவது: பல ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவைகள் வரியை விரைவில் அமல்படுத்துவது குறித்து விவாதித்து வருகின்றன. இந்த நாடுகளில் சில, இதை நடைமுறைப் படுத்தும் தருவாயில் உள்ளன. அத்தகைய வரியை விதிக்கும் எந்தவொரு நாடும், அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் உடனடியாக 100% சுங்க வரியைச் செலுத்த நேரிடும். இந்த சுங்க வரியானது, அந்த நாட்டுடன் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள், கையெழுத்திடப்பட்டிருந்தாலும் ரத்து செய்யப்படும். மேலும், அவர்கள் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்தால், 100% சுங்க வரி உடனடியாக விதிக்கப்படும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் இடையே மீண்டும் வர்த்தகப் பதற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலைக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயர் சூட்டப்பட்டது. இந்தியாவில் உள்ள சாலைக்கு அதிபர் டிரம்ப் பெயர் சூட்டப்பட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: இந்தியாவின் ஹைதராபாத்தில் அமைந்துள்ள புதிய ‘டொனால்ட் டிரம்ப் அவென்யூ’ சாலை. இவ்வகையில் கவுரவிக்கப்படும் முதல் அமெரிக்க அதிபர் நானே. நன்றி எனக் கூறியுள்ளார்.



















