முகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்: அமித் ஷா பேசியது என்ன?

திருநெல்வேலி: ஆகஸ்ட் 23-
‘தமிழகத்தில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்’ என்று, திருநெல்வேலியில் நடைபெற்ற கன்னியாகுமரி மண்டல பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய கன்னியாகுமரி மண்டல அளவிலான பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது.இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:சரித்திரம், வீரம், பண்பாடு, கலாச்சாரம் மிகுந்த தமிழ் மண்ணை வணங்குகிறேன். நாகாலாந்து மாநில ஆளுநராகப் பணியாற்றிய இல.கணேசன் தனது வாழ்க்கையை பாஜகவுக்காக அர்ப்பணித்தவர்.
அவரது ஆன்மா இளைப்பாற பிரார்த்திக்கிறேன். தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதா கிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முன்னிறுத்தி பெருமையடையச் செய்துள்ள பிரதமர் மோடிக்கும், பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
பிரதமர், முதல்வர் ஆகியோர் கைதாகி சிறைக்குச் சென்று, 30 நாட்களுக்கு மேலிருந்தால் அவர்களது பதவி பறிபோகும் புதிய மசோதா மக்களவையில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன.தமிழகத்தில் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் சிறையில் இருந்துள்ளனர்.
சிறையில் இருந்தவர்கள் ஆட்சியாளர்களாக தொடர முடியுமா, சிறையில் இருந்து கொண்டே ஆட்சி நடத்த முடியுமா? என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும்.மத்திய அரசின் இந்த புதிய மசோதாவை கருப்புச் சட்டம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். . தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல், எல்காட் ஊழல், போக்குவரத்து துறை ஊழல், இலவச வேட்டி-சேலையில் ஊழல், வேலை வாய்ப்பு வழங்குவதில் ஊழல் என, அனைத்து திட்டங்களிலும் ஊழல் செய்கிறார்கள்.
வரும் தேர்தலில் வெற்றிபெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்போது இதற்கு முடிவு கட்டப்படும்.திமுகவும், காங்கிரஸும் தங்களது வாரிசுகளை அரியணையில் அமர்த்த துடிக்கிறார்கள். சோனியா காந்தி தனது மகன் ராகுலை பிரதமராக்கவும், ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை முதல்வராக்கவும் கனவு காண்கிறார்கள். அந்த கனவ ஒருபோதும் பலிக்காது. தமிழகத்தில் திமுக கூட்டணியை, தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் தோற்கடிக்கும்.வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி ஆட்சி மாற்றத்தை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.