
சென்னை: பிப்ரவரி 14-
இரண்டாவது மனைவிக்கு பென்ஷன் வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தொடர்ந்த வழக்கில் 2-வது மனைவியின் பெயரை ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே 2ஆம் திருமணம் செய்தது சட்டவிரோதமானது எனக் கூறி தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி கடந்த 2007 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர் ராதாகிருஷ்ணன். இவரது முதல் மனைவி வசந்தா. இவர் உயிரோடு இருக்கும்போதே, ரேவதி என்பவரை 1992 ஆம் ஆண்டு ராதாகிருஷ்ணன் 2-வது திருமணம் செய்துகொண்டார். 2009-ம் ஆண்டு இரு மனைவிகளின் பெயர்களையும் குடும்ப ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என அவர் கொடுத்த கோரிக்கை மனுவை அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, ‘மனுதாரரின் முதல் மனைவி 2020 ஆம் ஆண்டு இறந்துவிட்டதால் 2-வது மனைவியை ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்’ என வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தனி நீதிபதி, 2-வது மனைவியின் பெயரை ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு அக்கவுண்டன்ட் ஜெனரல் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் பிறப்பித்துள்ள தீர்ப்பில், ஓய்வூதியம் என்பது ஒரு நலத்திட்டம் என்பதால், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதி என்பது மிகவும் முக்கியமானது. முதல் மனைவி இருக்கும்போது, 2-வது திருமணம் செய்வது சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.முதல் மனைவி இருக்கும்போது 2-வது திருமணம் செய்வதை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் விதி தடை செய்கிறது.இது குற்றம் என்பதால், இந்த செயல்களை செய்பவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரரின் 2-வது திருமணம் சட்டவிரோதம் என்பதால், முதல் மனைவி இறந்த நிலையில் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் கொடுக்கவேண்டும் என்பதை ஏற்க முடியாது. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்கிறோம் எனத் தீர்ப்பு அளித்துள்ளனர்.


















