மும்பை: பிப்ரவரி 12-
மும்பை மாநகராட்சி மேயராகப் பாஜக.வைச் சேர்ந்த ரிது தாவ்டே நேற்று பதவியேற்றுக் கொண்டார். துணை மேயராக சிவசேனாவின் சஞ்சய் சங்கர் காதி பதவியேற்றார்.
மகாராஷ்டிராவில் பிரிஹன்மும்பை மாநகராட்சித் தேர்தல் (பிஎம்சி) ஜனவரி 15-ம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 227 இடங்களில், ஆளும் பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா (ஷிண்டே) 29 இடங்களில் வெற்றி பெற்றது.
மேயரை தேர்ந்தெடுக்க 114 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாஜக கூட்டணி மொத்தம் 118 இடங்களில் வென்றது. இதன்மூலம் மேயர் பதவி இக்கூட்டணிக்கு உறுதியானது.
அதேநேரம் கடந்த 1997 முதல் பிரிஹன்மும்பை மாநகராட்சி தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த சிவசேனா (உத்தவ்), இந்த தேர்தலில் 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சியான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 6, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன. இதுபோல காங்கிரஸ் 24, ஏஐஎம்ஐஎம் 8, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 3, சமாஜ்வாதி 2 இடங்களில் வெற்றி பெற்றன.மும்பை மாநகராட்சி மேயர் பதவி பொதுப்பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக உறுப்பினர்கள் கூட்டம் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதில், 132-வது வார்டு உறுப்பினர் ரிது தாவ்டே மேயர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதை மூத்த தலைவர் அமித் சதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த வார்டில் 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ள ரிது தாவ்டே, பிஎம்சியின் கல்விக் குழுத் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். இதையடுத்து, ரிது தாவ்டே 7-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதுபோல சிவசேனா கட்சியின் (ஷிண்டே) 5-வது வார்டு உறுப்பினர் சஞ்சய் சங்கர் காதி துணை மேயர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் 7-ம் தேதி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். பிஎம்சி மேயர் தேர்தல் 11-ம் தேதி (நேற்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இவர்களுக்கு எதிராக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில் பிஎம்சியின் சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தேர்தல் அதிகாரியும் பிஎம்சி ஆணையருமான பூஷண் கக்ராணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மேயர், துணை மேயர் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடைமுறைகள் முடிந்த பின்னர், பிஎம்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 78-வது மேயராக ரிது தாவ்டே நேற்று பதவியேற்றுக் கொண்டார். துணை மேயராக சஞ்சய் சங்கர் காதி பதவியேற்றுக் கொண்டார். அப்போது பாஜக உறுப்பினர்கள் ‘ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்’ என்றும் ‘மோடி, மோடி’ என்றும் முழக்கங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மேயர் மற்றும் துணை மேயருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

















