Home விளையாட்டு மெஸ்ஸி, எம்பாப்பே சாதனை கோல்: நாக்-அவுட் சுற்றில் அர்ஜெண்டினா, பிரான்ஸ், நார்வே

மெஸ்ஸி, எம்பாப்பே சாதனை கோல்: நாக்-அவுட் சுற்றில் அர்ஜெண்டினா, பிரான்ஸ், நார்வே

லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூன் 23- ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல் பதிவு செய்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார். அவரை பிரான்ஸ் வீரர் எம்பாப்பே பின் தொடர்கிறார். நடப்பு தொடரில் அர்ஜெண்டினா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் குரூப் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த சுற்றான ‘ரவுண்ட் ஆப் 32’-க்கு முன்னேறுவது யார் என்ற போட்டி அணிகளுக்கு இடையே நிலவுகிறது. இந்த சூழலில் இந்த தொடரில் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளான அர்ஜெண்டினா, பிரான்ஸ் உள்ளிட்ட அணிகள் 2-வது குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடின. அர்ஜெண்டினா vs ஆஸ்திரியா குரூப்-ஜே பிரிவில் இடம்பெற்றுள்ள அர்ஜெண்டினா மற்றும் ஆஸ்திரியா அணிகள் அமெரிக்காவின் ஆர்லிங்டன் நகரில் இந்திய நேரப்படி திங்கட்கிழமை (ஜூன் 22) இரவு 10.30 மணி அளவில் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய முதல் 10 நிமிடத்துக்குள் அர்ஜெண்டினா அணி பெனால்டி வாய்ப்பை பெற்றது. இருப்பினும் அதை கோலாக மாற்ற தவறினார் மெஸ்ஸி. அடுத்த 10 நிமிடங்களில் அவர் கோல் பதிவு செய்யும் சூழல் இருந்தது. இருப்பினும் அதை ஆஸ்திரியா வீரர்கள் தடுத்தனர். 38-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்காக கோல் பதிவு செய்தார் மெஸ்ஸி. சக அணி வீரர் மெடினா, அவருக்கு இதில் உதவி இருந்தார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இது மெஸ்ஸியின் நான்காவது கோலாக அமைந்தது. மேலும், இந்த ஒரு கோல் மூலம் அவர் புதிய சாதனை படைத்தார். இந்த ஆட்டத்தின் இறுதியில் ஸ்டாப்பேஜ் நேரத்தில் மெஸ்ஸி மீண்டும் ஒரு கோல் பதிவு செய்தார். இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு அர்ஜெண்டினா முன்னேறி உள்ளது. ஆஸ்திரியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பதிவு செய்த முதல் கோல் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் பதிவு செய்த ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸ் சாதனையை மெஸ்ஸி முறியடித்தார். குளோஸ் 16 கோல்களுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது 18 கோல்களுடன் மெஸ்ஸி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.