மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 65,000 கனஅடியாக அதிகரிப்பு

தரு​மபுரி அக். 25-
மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி​யில் விநாடிக்கு 65,000 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​பட்​டுள்​ளது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்து வரும் கனமழை​யாலும், கர்​நாடக அணை​களான கேஆர்​எஸ், கபினி அணை​களி​லிருந்து உபரி நீர் திறக்​கப்​பட்டு வரு​வ​தா​லும் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்து வரு​கிறது.அணைக்கு நேற்று முன்​தினம் மாலை 45,000 கனஅடி​யாக​வும், இரவு 55,000 கனஅடி​யாக​வும் இருந்த நீர்​வரத்து நேற்று மதி​யம் 65,000 கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது. அணை ஏற்​கெனவே நிரம்பி விட்​ட​தால், அணைக்கு வரும் தண்​ணீர் முழு​வதும் திறக்​கப்​படு​கிறது. அணை மற்​றும் சுரங்க மின் நிலை​யம் வழி​யாக 22,500 கனஅடி, 16 கண் மதகு​கள் வழி​யாக 42,500 கனஅடி என மொத்​தம் 65,000 கனஅடி தண்​ணீர் காவிரி​யில் திறக்​கப்​பட்டு வரு​கிறது. கால்​வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 500 கனஅடி திறக்​கப்​படு​கிறது.
மேட்​டூர் அணை​யின் நீர்​மட்​டம் 120 அடி​யாக​வும், நீர் இருப்பு 93.47 டிஎம்​சி​யாக​வும் உள்​ளது. அணைக்​கான நீர்​வரத்து மேலும் அதி​கரிக்க வாய்ப்​புள்​ள​தால், வெள்​ளக் கட்​டுப்​பாட்டு மையத்​தில் 24 மணி நேர​மும் நீரின் அளவை அதி​காரி​கள் கண்​காணித்​தும், தேவைக்​கேற்ப வெளி​யேற்​றி​யும் வரு​கின்​றனர்.
அணையி​லிருந்து 65,000 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​வ​தால் காவிரிக் கரையோர மக்​களுக்கு விடுக்​கப்​பட்​டுள்ள வெள்ள அபாய எச்​சரிக்கை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், வரு​வாய், தீயணைப்​பு, நீர்​வளம் உள்​ளிட்ட பல்​வேறு துறை​களைச் சேர்ந்த அதி​காரி​கள், காவிரிக் கரையோரப் பகு​தி​களில் கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.விநாடிக்கு 65,000 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​வ​தால், காவிரி ஆற்​றில் கட்​டப்​பட்​டுள்ள 7 கதவணை​களில் மின் உற்​பத்தி நிறுத்​தப்​பட்​டுள்​ளது. அணை மற்​றும் சுரங்க மின் நிலை​யத்​தில் மட்​டுமே 250 மெகா​வாட் மின் உற்​பத்தி நடக்​கிறது என்று அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் காலை விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து மாலை​யில் 50 ஆயிரம் கனஅடி​யாக​வும், நேற்று காலை 4 மணி​யள​வில் 57 ஆயிரம் கனஅடி​யாக​வும், மதி​யம் 12 மணி​யள​வில் 65 ஆயிரம் கனஅடி​யாக​வும் படிப்​படி​யாக உயர்ந்​தது. வெள்​ளப்​பெருக்கு காரண​மாக ஒகேனக்​கல் ஆறு மற்​றும் அருவி​களில் குளிக்​க​வும், பரிசல் இயக்​க​வும் மாவட்ட நிர்​வாகம் அறி​வித்த தடை தொடர்​கிறது. காவிரிக் கரையோர பகு​தி​களை வரு​வாய், வனம் உள்​ளிட்ட துறை அலு​வலர்​கள் தொடர்ந்து கண்​காணித்து வரு​கின்​றனர்​.