
புதுடெல்லி: ஏப்ரல் 27 –
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தொண்டர் தேப்தீப் சாட்டர்ஜி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் கட்சி குண்டர்களால் காங்கிரஸ் தொண்டர் தேப்தீப் சாட்டர்ஜி படுகொலை செய்யப்பட்டது கடும் கண்டனத்துக்கு உரியது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஜனநாயகத்துக்குப் பதிலாக திரிணமூல் காங்கிரஸின் குண்டர்கள் ராஜ்ஜியம் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு முடிந்த பிறகும் மாற்றுக் கருத்து உடையவர்களை மிரட்டுவது, தாக்குவது மற்றும் அவர்களின் குரலை நசுக்குவது திரிணமூல் காங்கிரஸின் அடையாளமாக மாறிவிட்டது.
காங்கிரஸின் அரசியல் ஒரு போதும் வன்முறையை அடிப்படையாகக் கொண்டதல்ல; இனிமேலும் இருக்காது. நாங்கள் பல தொண்டர்களை இழந்திருந்தாலும், எப்போதும் அகிம்சை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதையையே தேர்ந்தெடுத்துள்ளோம்.
இதுவே எங்களது பாரம்பரியம் மற்றும் உறுதிப்பாடு. குற்றவாளிகள் அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். தேப்தீப் சாட்டர்ஜி குடும்பத்துக்கு முழு பாதுகாப்பு மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும். இந்தியாவின் அகிம்சைப் பாரம்பரியத்துக்குக் களங்கம் விளைவிக்கும் இந்த அரசியலுக்கு நாங்கள் பணிய மாட்டோம். நீதி நிலைநாட்டப்படும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார். ஆசன்சோல் வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரசென்ஜித் புய்தாண்டியுடன் இணைந்து தேப்தீப் சாட்டர்ஜி பணியாற்றி வந்தார். தேர்தல் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த போது, திரிணமூல் காங்கிரஸுடன் தொடர்புடைய சமூக விரோதிகளால் அவர் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகவும், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கமிட்டியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















