காந்திநகர், ஜூலை 10- குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்த விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் சிலர் ஆற்றில் சிக்கியிருக்கலாம் என் அஞ்சப்படுவதால், தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. வடோதரா மாவட்டம் பத்ரா தாலுகாவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்கு ஓடும் மஹிசாகர் ஆற்றின் குறுக்கே கம்பீரா – முஜிப்புர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டிருந்தது. இந்த பகுதியில் இது முக்கியமான பாலம் என்பதால், தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். நேற்றும் இப்படித்தான் பலரும் பள்ளிக்கும், வேலைக்கும் சென்றுக்கொண்டிருந்த நிலையில், திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து அற்றில் விழுந்தது. இதனால் பாலத்தில் சென்றுக்கொண்டிருந்த வாகனங்கள் சில கட்டுப்பாட்டை மீறி ஆற்றில் விழுந்தன. இதில் 3-5 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் முதலில் வெளியாகின. தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சில ஆற்றில் விழுந்திருக்கலாம் என்று சொல்லபடுவதால் அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், “பாலம் பயங்கர சத்தத்துடன் விரிசல்விட்டது. அடுத்து சில நொடிகளுக்கெல்லாம் பாலம் சடசடவென சரிந்தது. இதில் 2 லாரிகள், ஒரு கார், சில பைக்குகள் அப்படியே ஆற்றுக்குள் விழுந்தது” என்று கூறியுள்ளனர். இந்த விபத்து நடந்தவுடன் பொதுமக்கள் சிலர் ஆற்றில் இறங்கி, உயிருக்கு போராடியவர்களை மீட்டிருக்கின்றனர். ஆனாலும், உயிரிழப்புகள் தவிர்க்க முடியாமல் போய் இருக்கிறது. தற்போது தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தேடுதல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.பாலத்தை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வந்தன. இருப்பினும் பாலத்தின் உறுதி தன்மையை பராமரிக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், எனவேதான் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.















