நாக்பூர்: ஜூலை 12-
தலைவர்கள் 75 வயதில் ஓய்வுபெற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். வரும் செப்டம்பரில் பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடையும் சூழலில் அவர் இவ்வாறு கூறியிருப்பது பாஜகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் மோரோ பந்த் பிங்க்லே குறித்த புத்தக வெளியீட்டு விழா நாக்பூரில் 9-ம் தேதி நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டு, புத்தகத்தை வெளியிட்டார். விழாவில் அவர் பேசும்போது, ‘‘உங்களுக்கு 75 வயது ஆகிறது என்றால், நீங்கள் ஒதுங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும்’’ என்றார்.
வரும் செப்டம்பரில் பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடைகிறது. இதை சுட்டிக்காட்டியே, மோகன் பாகவத் இவ்வாறு கூறியதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. அவரது கருத்து பாஜகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடிக்கு செப்டம்பர் 17-ம் தேதி 75 வயது ஆகிறது என்பதை மோகன் பாகவத் மிக அழகாக நினைவுபடுத்தி உள்ளார்.அதேநேரம், மோகன் பாகவத்துக்கு செப்டம்பர் 11-ம் தேதி 75 வயது ஆகிறது. இதே கருத்தை அவரிடமும் பிரதமர் மோடி சொல்லலாம். எப்படியோ.. ஓர் அம்பு, இரு இலக்குகள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.















