
சென்னை: அக். 29-
‘வெடிகுண்டு வீசி தாக்குவோம்’ என நடிகர்கள் ரஜினி, கமல் மற்றும் தனுஷுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சமீப காலமாக அரசியல் பிரபலங்கள், கல்வி நிறுவனங்கள், திரை பிரபலங்கள் மற்றும் விமான நிலையங்கள், ஆளுநர் மாளிகை என பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று அதிகாலை இ-மெயில் ஒன்று வந்தது.
அதில், நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், தனுஷ் ஆகியோர் மீது வெடிகுண்டு வீசி தாக்கப்போவதாக கூறப்பட்டிருந்தது. பொதுவாக வீடுகள், அலுவலகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகத்தான் மிரட்டல் வரும். ஆனால், வெடிகுண்டு வீசப்படும் என்று வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
இதையடுத்து போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீடுகளிலும், ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீடு, அலுவலகத்திலும் போலீஸார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சென்று சோதனை நடத்தினர். ஆனால், சந்தேகப்படும்படியான எந்தப் பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை.
இதேபோல சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீடு, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமியின் சாந்தோம் இல்லத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அங்கு சோதனை நடத்தியதில் அதுவும் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாம்பரம் அருகே மணிமங்கலம் ஊராட்சி அம்பேத்கர் தெருவில் தமிழக காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகையின் வீடு உள்ளது. படப்பையில் அவரது அலுவலகம் உள்ளது. இந்த இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் குண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. மேலும், சென்னை தி.நகர் போக் ரோட்டில் உள்ள நடிகர் பிரபு வீட்டிலும் போலீஸார் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.















