
ஹைதராபாத்: ஜூலை 9-
ஓடும் ரயிலில் புதுமண தம்பதிக்காக முதல் வகுப்பு ஏசி பெட்டி கிட்டத்தட்ட முதலிரவு செட் அப்பில் பலூன்கள், மலர்கள் மற்றும் ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்டது சர்ச்சையானது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், தெற்கு மத்திய ரயில்வே இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக முக்கிய விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளது. இந்தியாவில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்தில் ஒன்றாக ரயில்வே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பல கோடி மக்கள் நாடு முழுக்க ரயில் சேவையை பயன்படுத்துகிறார்கள். ரயில்வே பாதுகாப்பு மற்றும் சேவையை உறுதி செய்ய ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
முதலிரவு செட்அப்! இதற்கிடையே ரயில் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. 11002 நந்திகிராம் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலில் பயணித்த புதுமண தம்பதி ஒருவர், முதல் வகுப்பு ஏசி கூபேவை முதலிரவு போல அலங்கரிக்க ஏற்பாடு செய்திருந்தது. தனியார் நிறுவனம் மூலம் அவர்கள் இதைச் செய்துள்ளனர். கடந்த ஜூலை 6-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாது.
ரயில்வே நடவடிக்கை இந்தியாவில் ரயில்களில் இதுபோல அலங்கரிக்க முடியுமா.. அவர்கள் விதிமுறைகளை மீறியுள்ளனர்.. அதிகாரிகளும் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று நெட்டிசன்கள் பொங்கி தள்ளினர். கடந்த இரு நாட்களாகவே இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக தெற்கு மத்திய ரயில்வே விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜல்னா ரயில் நிலையத்தில் தனியார் நிறுவன ஊழியர் அனுமதியின்றி ரயிலுக்குள் நுழைந்து பெட்டியை அலங்கரித்துள்ளார். இது மிகவும் கடுமையான பாதுகாப்பு விதிமுறை மீறலாக கருதப்படுகிறது.. இந்த சம்பவம் தொடர்பாக பணியில் இருந்த ரயில்வே ஊழியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விரிவான துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறப்பட்டுள்ளது.


















