
லக்னோ, மே 25- கடந்த 2025 ஐபிஎல் சீசனில் 7-வது இடம், நடப்பு ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றி பெற்று அட்டவணையில் கடைசி இடம் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எலஎஸ்ஜி) அணி பின்னடைவைக் கண்டுள்ளது. இந்நிலையில், ரிஷப் பண்ட் கேப்டன்சி குறித்து டாம் மூடி விமர்சனம் செய்துள்ளார். ரிஷப் பண்ட் கேப்டன்சியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18 போட்டிகளில் தோற்றும், 10-ல் வெற்றி பெற்றும் உள்ளது. இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் குளோபல் டைரக்டர் டாம் மூடி, ரிஷப் பண்ட்டுக்கு கேப்டன்சி சவாலாக உள்ளது.
அவரால் அது முடியவில்லை என்று விமர்சனம் செய்துள்ளார். “கேப்டன்சி என்கிற கோணத்தில் பார்த்தால், ரிஷப் பண்ட்டுக்கு அது பெரும் சவாலாக உள்ளது. அணியின் ஆட்ட முடிவுகளே அவரது போதாமைக்குச் சான்று. இந்த அழுத்தம்தான் அவரது பேட்டிங் வீழ்ச்சியிலும் எதிரொலிக்கிறதோ என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. இந்த ஐபிஎல் தொடர் எங்களுக்கு மிகவும் கடினமாக அமைந்தது. ஆனால் என்ன நடந்தது என்பதை ஆராய்வோம். கால அவகாசம் எடுத்துக் கொண்டு சிந்திப்போம். அனைத்து விஷயங்களையும் பரிசீலிப்போம். நிச்சயமாக நாங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. நாங்கள் எங்களுக்கு நிர்ணயித்துக் கொண்ட தரநிலையில் ஆடவில்லை. அதுவும் தனி உரிமை கிரிக்கெட் அணி ஒன்றுக்கு தலைமை என்பது மிகவும் சீரியஸான ஒன்று. எதிர்காலம் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்த சீசனின் பேட்டிங், பவுலிங், பீல்டிங் மற்றும் பரவலாக பல விஷயங்களைப் பரிசீலிக்கும் போது அணியை மாற்றியமைக்க வேண்டுமென்பது தெளிவாகிறது. இந்த ஏமாற்றமான சீசனுக்கு நாங்கள் அனைவருமே பொறுப்பேற்கிறோம். ஒரு தனிப்பட்ட வீரர் மீதோ நபர் மீதோ சுட்டு விரலை நீட்டி குற்றம்சாட்ட இது நேரமில்லை. இதற்கு நாங்கள் அனைவருமே பொறுப்பேற்கிறோம். அமைதியான முறையில் இதைப்பற்றி யோசிக்க வேண்டியுள்ளது. ஆனால் சில விஷயங்கள் கறாராக பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளது. அதைக் கண்டிப்பாக பரிசீலிப்போம்” என்றார் டாம் மூடி.





















