ரீல்ஸ் மோகத்தால் உயிரை விட்ட இளைஞர்

தூத்துக்குடி: நவம்பர் 3-
இன்ஸ்டாகிராமில் வியூஸ் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி கல்லூரி மாணவர் செய்த செயல் அவரது உயிரையே பறித்துவிட்டது. வித்தியாசமான ரீல்ஸ் எடுத்தால் தான் வியூஸ் அதிகமாக வரும் என்று நினைத்து ஓடும் ரயிலின் மேற்கூரையில் ஏறிய போது உயரழுத்த மின்கம்பி உரசி தூக்கி வீசப்பட்டு கல்லூரி மாணவர் அருண் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போதைய நவீன காலத்தில் எல்லாரது கையிலும் ஆறாம் விரலைப்போல் செல்போன் இருந்து வருகிறது. குளிக்கும் போது தவிர மற்ற அனைத்து இடங்களிலும் பலரும் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். எவ்வளவோ பயனுள்ள விஷயங்கள் செல்போனில் இருந்தாலும் சிலர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பதிலேயே நேரத்தை செலவிட்டு விடுகிறார்கள். இன்ஸ்டா ரீல்ஸ் மோகம் நாளடைவில் இன்ஸ்டா ரீல்ஸ்க்கு அடிமையாகி நாமும் இதேபோன்று ரீல்ஸ் பதிவிட்டு வியூஸ் பெற வேண்டும் என்ற ஆசையில் தற்போதைய இளைஞர்கள் சிலர் வித்தியாசமான வீடியோக்களை எடுத்து, எடிட்டிங் செய்து ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர். சிலர் தங்கள் உயிரையும் பணயம் வைத்து இப்படி செயல்படுகின்றனர்.
ரீல்ஸ் மோகத்தால் இப்படி தனது உயிரையும் பணயம் வைத்து ரீல்ஸ் வீடியோ வெளியிடும் இளைஞர்கள் மத்தியில் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், மீண்டும் மீண்டும் அதேபோன்ற செயல்களையே செய்து வருகின்றனர். தூத்துக்குடி கல்லூரி மாணவர் அருண் என்பவரும் ரீல்ஸ் மோகத்தால் அதிக வியூஸ் பெற வேண்டும் என்பதற்காக வித்தியாசமாக வீடியோ எடுக்க முயன்றபோது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:-
அதிக லைக்ஸ்கள் பெற நினைத்து தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் நீதிதாசன். இவரது மகன் அருண் (வயது 18). அருண் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டு வந்தார். இவரது வீடியோக்களுக்கு பல பாலோயர்கள் இருந்தனர். இவரது ரீல்ஸ் வீடியோக்களுக்கு 14 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களும் உதவியாக இருந்தனர். தொடர்ந்து இவர்கள் செல்போனில் விதவிதமாக புகைப்படங்கள், ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தனர். பெரிதாக வியூஸ் வர வேண்டும் என்பதற்காக எதாவது வித்தியாசமான வீடியோ பதிவிட வேண்டும் என அவர்கள் முடிவு செய்தனர். அப்போது தான் அதிக லைக்குகளும் வரும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது. இதற்காக இரு சிறுவர்களுடன் சேர்ந்து ரயில் மீது ஏறி ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்றுள்ளனர். உயரழுத்த மின் கம்பி உரசியது இதற்காக தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்துக்கு சென்ற அவர்கள், அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மேல் பகுதியில் ஏறினர். ரயிலின் மேல் நின்று கொண்டு செல்போனை எடுத்து ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களது கை ரயிலின் மேல் தாழ்வாக சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பி மீது பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து மூவரும் தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு இதில் கல்லூரி மாணவர் அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இரண்டு சிறுவர்கள் பலத்த காயமடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.