Home மாவட்டங்கள் பெங்களூர் ரூ.1.98 லட்சம் உண்டியல் பணம் திருடிய நபர் கைது

ரூ.1.98 லட்சம் உண்டியல் பணம் திருடிய நபர் கைது

ஹாசன்: ஜுலை 10-
அயோத்தி ராமர் கோவில் உண்டியல் பணம் திருடப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கர்நாடக மாநிலம் பேலூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சென்னகேசவ சுவாமி கோவிலிலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது, அங்கு பணியில் இருந்த நபர் ஒருவர், யாரும் எதிர்பாராத நேரத்தில் ரூ. 1.98 லட்சம் பணத்தை அப்படியே சுருட்டி, தான் அணிந்திருந்த ஜாக்கெட் உள்ளே மறைத்து அபேஸ் செய்துள்ளார்.
உண்டியல் எண்ணும் பணியை வீடியோ எடுக்க வந்த ‘கர்நாடகா ஒன்’ மையத்தின் உரிமையாளரான நீலகண்டா என்பவர்தான் இந்த கைவரிசையைக் காட்டியுள்ளார். இவரது நடத்தையில் சந்தேகமடைந்த முஜராய் துறை அதிகாரிகள், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அவர் பணத்தை திருடும் திருட்டுத்தனம் அம்பலமானது.
இதுகுறித்து தாசில்தார் ஸ்ரீதர் கங்கனவாடி பேலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.