பெங்களூரு: ஜூலை 12 –
இந்திய வாகன விற்பனையில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் இனி எதிர்காலம் என்பதால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களில் பிரிவில் அதிகப்படியான வாகனங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் மத்திய அரசு கொடுக்கும் மானியமும், மாநில அரசு கொடுக்கும் சலுகைகளும் தான்.
ஆனால் இதுநாள் வரையில் மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி கனரக வாகனங்களுக்கு எவ்விதமான சலுகையும் அளிக்கவில்லை. இதேபோல் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இப்பிரிவில் தீவிரமாக இறங்காத நிலையில், சமீபத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. இப்படியிருக்கும் வேளையில் மத்திய அரசு தரப்பில் இருந்து மாபெரும் மானிய திட்டத்துடன் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் டீசல் டிரக்குகள் என்பது மொத்த வாகன எண்ணிக்கையில் வெறும் 3% மட்டுமே, ஆனால் போக்குவரத்து உமிழ்வில் இந்த 3 சதவீத டீசல் டிரக்குகள் சுமார் 42% பங்களிக்கின்றன என்று மத்திய அமைச்சர் குமாரசாமி குறிப்பிட்டார். இந்த உமிழ்வை குறைக்க, மத்திய அரசு எலக்ட்ரிக் டிரக்குகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் சரி செய்ய முடியும் என நம்புகிறது. எச்.டி.குமாரசாமி முக்கிய அறிவிப்பு: இப்புதிய திட்டத்தை இன்று வெளியிட்ட மத்திய கனரக தொழில்கள் அமைச்சர் எச்.டி.குமாரசாமி, பிஎம் இ-டிரைவ் திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு முதல் முறையாக ஊக்குவிப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவின் வாகன உமிழ்வைக் குறைத்து, 2070 ஆம் ஆண்டுக்குள் நெட் ஜீரோ உமிழ்வு இலக்கை அடையும் நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்தார்.















