
புதுடெல்லி, பிப். 14- நாடாளுமன்ற வளாகத்தில் ரூ.1,189 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பிரதமர் அலுவலகத்தை (சேவா தீர்த்) பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு ஆங்கிலேய ஆட்சியின் அடையாளத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு 2023-ம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.அதோடு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம், பல்வேறு அமைச்சகங்களின் அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் ரூ.1,189 கோடி செலவில் பிரதமர் அலுவலகம் (சேவா தீர்த்) கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். சுமார் 5 ஏக்கர் பரப்பில் புதிய பிரதமர் அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. இதில் சேவா தீர்த் 1, சேவா தீர்த் 2, சேவா தீர்த் 3 என்ற பெயரில் 3 பிரதான கட்டிடங்கள் உள்ளன. இதில் சேவா தீர்த் 1 கட்டிடத்தில் பிரதமர் அலுவலகம் செயல்படும் சேவா தீர்த் 2 கட்டிடத்தில் கேபினட் செயலாளர் அலுவலகம் செயல்படும். சேவா தீர்த் 3 கட்டிடத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் அலுவலகம் செயல்படும். மேலும் மத்திய அரசின் தலைமைச் செயலகத்தின் ஒரு பகுதியாக கர்த்தவ்ய பவன் 1, கர்த்தவ்ய பவன் 2 கட்டிடங்களையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இவற்றில் நிதியமைச்சகம், பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை, கார்ப்பரேட் விவகாரம், கல்வி, கலாச்சாரம், சட்டத் துறை, தகவல்- ஒலிபரப்புத் துறை, வேளாண் துறை, ரசாயனத் துறை, பழங்குடியினர் நலத் துறை ஆகியவை செயல்படும். பிரதமர் அலுவலகத்துக்கு அருகில் ரூ.467 கோடி செலவில் 36,000 சதுர அடி பரப்பளவில் பிரதமரின் வீடு கட்டப்பட்டு வருகிறது. இந்த வீட்டில் இருந்து பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு செல்ல பிரத்யேக சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடு விரைவில் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

















