Home மாவட்டங்கள் பெங்களூர் லாரியை வழிமறித்து துப்பாக்கிச்சூடு: தொழிலதிபர் மகன் கைது

லாரியை வழிமறித்து துப்பாக்கிச்சூடு: தொழிலதிபர் மகன் கைது

மண்டியா: ஜூலை 3-
பெங்களூரு – மைசூர் பழைய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில், சொகுசு காரில் வந்த பெரும் தொழிலதிபர் ஒருவரின் மகனும், அவனது கூட்டாளிகளும் சேர்ந்து லாரி டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
மைசூரைச் சேர்ந்த லாரி டிரைவர் சங்கர் என்பவர், பெங்களூரில் இருந்து மருந்துகளை ஏற்றிக்கொண்டு நள்ளிரவில் தனியாக கன்டெய்னர் லாரியில் மண்டியா நோக்கி வந்து கொண்டிருந்தார். அதிகாலை 4 மணி அளவில், பழைய நெடுஞ்சாலையில் பதுங்கியிருந்த தொழிலதிபர் மகனின் கும்பல், லாரியை வழிமறிக்க முயன்றது. ஆனால், நள்ளிரவு நேரம் என்பதால் பயந்துபோன டிரைவர் சங்கர், லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டினார்.
ஆத்திரமடைந்த தொழிலதிபர் மகன், கண் இமைக்கும் நேரத்திற்குள் கன்டெய்னர் லாரியை நோக்கி ‘டமார்.. டமார்..’ என துப்பாக்கியால் சுட்டான்! நல்ல வேளையாக, இந்த துப்பாக்கிச் சூட்டில் டிரைவர் சங்கர் உயிர் தப்பினார். எனினும், அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்துபோன அவர், போலீசாருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் அங்கிருந்து தப்பியோடினார்.
நெடுஞ்சாலையில் துப்பாக்கிச் சூடு நடந்த விஷயம் பொதுமக்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது. தகவல் அறிந்த மண்டியா கிராமப்புற போலீசார் உடனடியாக களத்தில் குதித்தனர். முதலில் தலைமறைவாக இருந்த லாரி டிரைவர் சங்கரை தேடிப்பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து அதிகாரப்பூர்வமாக புகார் பெற்றனர். அதிரடி வேட்டையில் இறங்கிய போலீசார், நள்ளிரவில் அந்த செல்வாக்குமிக்க தொழிலதிபரின் மகனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்
தற்போது மண்டியாவின் டி.வொய்.எஸ்.பி அலுவலகத்தில் வைத்து கைதான தொழிலதிபர் மகனிடம் போலீசார் விடிய விடிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாலை 4 மணிக்கு சொகுசு காரில் இந்த கும்பல் நெடுஞ்சாலையில் ஏன் நின்றது? லாரியை கொள்ளையடிக்க பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டதா? முறையான லைசென்ஸ் இல்லாத கள்ளத்துப்பாக்கி இந்த தொழிலதிபர் மகனுக்கு எப்படி கிடைத்தது? என்ற பல கோணங்களில் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய இந்த கும்பலின் மற்ற ரவுடிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!