Home விளையாட்டு லூகா மோட்ரிச் தலைமையில் குரோஷியா அணி அறிவிப்பு

லூகா மோட்ரிச் தலைமையில் குரோஷியா அணி அறிவிப்பு

சென்னை, மே 19- ஃபிபா உலகக் கோப்பை-2026 கால்பந்து தொடருக்கான குரோஷியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியை இந்த தொடரில் கேப்டனாக வழிநடத்துகிறார் லூகா மோட்ரிச். வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை இந்த தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இந்த தொடர் நடைபெறுகிறது. மொத்தம் 48 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. 39 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 104 போட்டிகள் விளையாடப்பட உள்ளது. இதில் குரூப் சுற்று போட்டிகள் ஜூன் 11 முதல் 27-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. நாக்-அவுட் சுற்றான ‘ரவுண்ட் ஆப் 32’ சுற்று ஜூன் 29 முதல் ஜூலை 3 வரை நடைபெறுகிறது. அதன் பின்னர் காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 4 முதல் 11-ம் தேதி வரையில் திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி ஜூலை 19-ம் தேதி அன்று அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் நடைபெறுகிறது.முதல் பட்டம் வெல்லும் முனைப்பில் குரோஷியா: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான குரோஷியா, 7-வது முறையாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கிறது. கடந்த 1998-ல் முதல் முறையாக உலகக் கோப்பை தொடரில் குரோஷியா அணி பங்கேற்றது. முதல் உலகக் கோப்பை தொடரில் மூன்றாம் இடம் பிடித்தது. அதன் பின்னர் 2018-ல் ரஷ்யாவில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை தொடரில் இரண்டாம் இடம் பிடித்தது. 2022-ல் கத்தாரில் நடைபெற்ற தொடரில் மூன்றாம் இடம் பிடித்தது. இந்நிலையில், நடப்பு ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-எல் பிரிவில் இடம்பெற்றுள்ளது குரோஷியா. இதே பிரிவில் இங்கிலாந்து, பனாமா மற்றும் கானா உள்ளிட்ட அணிகள் உள்ளன. ஜூன் 17 அன்று இங்கிலாந்து உடன் முதல் ஆட்டத்தில் குரோஷியா விளையாடுகிறது. அந்த அணியின் கேப்டன் லூகா மோட்ரிச், ஐந்தாவது முறையாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கிறார். கடந்த 2006, 2014, 2018 மற்றும் 2022 தொடரில் அவர் பங்கேற்றுள்ளார்.