புதுடெல்லி: ஜூலை 8-
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன. விசாரணையின்போது, புதிய வக்பு சட்டத்தில் முஸ்லிம் அல்லாதவர்களையும் குழுக்களில் சேர்ப்பது உள்ளிட்ட சில அம்சங்கள் மீது நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, மத்திய அரசு தாமாகவே முன்வந்து சர்ச்சைக்குரிய அம்சங்களை வழக்கு முடியும் வரை அமல்படுத்தமாட்டோம் என உத்தரவாதம் அளித்திருந்தது. இதனால், சில அம்சங்களுக்கான தடையுடன் புதிய வக்பு திருத்த சட்டம் மீதான மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இதில், தேசிய அளவிலான ஒரு இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கி இருந்தது. இதையடுத்து, புதிய வக்பு சட்டத்துக்கான ஒருங்கிணைந்த மேலாண்மை விதிகளை மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. 17 பக்கங்களைக் கொண்ட இந்த விதிமுறைகள், ‘ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை அதிகாரமளித்தல் திறன் மற்றும் மேம்பாட்டு விதிகள் 2025’ எனும் பெயரில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து மாநிலங்களும் வக்பு சொத்துகளை தேசிய அளவிலான இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த வக்பு சொத்துகளை மத்திய சிறுபான்மையினர் நல விவகார அமைச்சகத்தின் ஒரு இணைச் செயலாளர் கண்காணிக்க உள்ளார்.
சொத்து பதிவுக்கு பிறகு இணையம் சார்பில் வக்பு மற்றும் அதன் சொத்துக்கும் ஒரு தனித்துவமான எண் வழங்கப்படும். இதற்காக, அனைத்து மாநிலங்களும் இணைச் செயலாளர் நிலை அதிகாரியை நோடல் அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.















