வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து வியாபாரி கொலை

நியூயார்க்: பிப்ரவரி 11-
வங்​கதேசத்​தில் பொதுத்​தேர்​தல் நடை​பெற உள்ள நிலை​யில் இந்து வர்த்​தகர் கொடூர​மாக கொலை செய்யப்பட்டுள்ளார்.வங்​கதேசத்​தில் நாளை பொதுத் தேர்​தல் நடை​பெறுகிறது.
பிரதமர் பதவி​யில் இருந்து ஷேக் ஹசீனா வில​கிய பிறகு நடந்த வன்முறை சம்பவம் மற்றும் தாக்குதல்களில் இந்​துக்​கள் பலர் கொல்​லப்​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில், மைமென்​சிங் மாவட்டத்தில் நேற்று முன்​தினம் இந்து அரிசி வர்த்​தகர் சுஷேன் சந்​திர சர்க்​கார் (62) கொடூர​மான முறை​யில் மர்ம நபர்​களால் கொல்​லப்​பட்​டுள்​ளார். இதுகுறித்து காவல் துறை​யினர் வழக்கு பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் ‘இந்​துக்​கள் மனித உரிமை’ என்ற அமைப்பு ஐ.நா. மற்​றும் பல்​வேறு நாடு​களுக்கு கடிதம் அனுப்பி உள்​ளது. அதில் 15 நாடு​களைச் சேர்ந்த சர்​வ​தேச மனித உரிமை அமைப்​பு​கள், மத அமைப்​பு​கள், சமூக அமைப்​பு​கள் கையெழுத்​திட்​டுள்​ளன.
அந்​தக் கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: வங்​கதேசத்​தில் யூனுஸ் தலை​மையி​லான இடைக்​கால நிர்​வாகத்​தின் கீழ், இந்​துக்​களுக்கு எதி​ராக தொடர்ந்து அடக்​கு ​முறை​கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. திட்​ட​மிட்டு இந்​துக்​கள் மீது தாக்குதல் நடத்​தப்​படு​கிறது.
இந்த விவ​காரத்​தில் ஐ.நா. அமெரிக்​கா, ஐரோப்​பிய யூனியன், இந்தியா மற்​றும் சர்​வ​தேச அமைப்​பு​கள் உடனடி​யாக நடவடிக்கை எடுத்​து, வங்​கதேச இந்​துக்​களைப் பாது​காக்க வேண்டும். ஐ.நா. உட்பட உலக நாடு​கள் இந்த விஷ​யத்​தில் கவனம் செலுத்தி தீர்​வுள்ள ஒரு நடவடிக்​கையை எடுக்க வேண்டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.