வட மாநில இளைஞரை ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிய சிறுவர்கள்

திருவள்ளூர்: டிசம்பர் 29-
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ரயிலில் கத்தியை காட்டி மிரட்டுவது போல ரீல்ஸ் எடுத்த சிறுவர்கள், அப்போது ஏற்பட்ட தகராறில் வட மாநில இளைஞரை, மறைவான இடத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக ரத்தம் சொட்ட சொட்ட அரிவாள் மற்றும் கட்டையால் தாக்கிய காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. பதைபதைக்க வைக்கும் இந்த காட்சிகள் வலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில், போலீசார் 4 சிறுவர்களை கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிராஜ் என்ற புலம்பெயர் தொழிலாளியை நான்கு சிறுவர்கள் அரிவாளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சிராஜ், கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல் வடமாநில இளைஞர் கெஞ்சி கேட்டும் அவரை கொடூரமாக தாக்கும் சிறுவர்கள், இந்த காட்சிகளை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. வட மாநில இளைஞரை ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிவிட்டு, சிறுவன் ஒருவன் வெற்றிச் சின்னத்தைக் காட்டிய காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
வட மாநில இளைஞரான சிராஜ், ரயிலில் சென்ற போது அவரை இந்த சிறுவர்கள் வம்பிழுத்ததாகவும், பிறகு ரயிலில் இருந்து இறக்கி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கியதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
நெஞ்சை உறைய வைத்த வீடியோ இந்த தாக்குதலை செல்போன் கேமராவில் படம் பிடித்துள்ளனர். நெஞ்சை உறைய வைக்கும் இந்த கொடூரக் காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. தாக்குதலில் படுகாயம் அடைந்த சிராஜ் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
இந்த வைரல் வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் பின்னணி மற்றும் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிய காவல் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் கஞ்சா போதையில் 4 சிறுவர்களும் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். வீடியோ காட்சிகளின் அடிப்படையில், திருவலங்காடு பகுதியை சேர்ந்த சிறார்களின் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.