
வாஷிங்டன், ஜன. 21- கடந்த 27 ஆண்டுகளாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையான நாசாவில் சேவையாற்றி வந்த சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றுள்ளார். சுனிதா வில்லியம்ஸ் இதுவரை 3 விண்வெளிப் பயணங்களில் மொத்தம் 605 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது சேவைக்கு நாசாவும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்.. கடந்த 27 ஆண்டுகளாக இவர் நாசாவில் சேவையற்றி வந்துள்ளார், கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்கு மேல் விண்வெளியில் கழித்து பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டு இருக்கிறார்.சுனிதா வில்லியம்ஸ் கடைசியாக இவர் 2024 ஜூன் மாதம் விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்றார். உண்மையில் அந்தப் பயணம் 10 நாட்கள் மட்டுமே திட்டமிடப்பட்டு இருந்தது. இருப்பினும், அவர் சென்ற ராக்கெட்டில் சில தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவரால் பூமிக்குத் திரும்ப முடியவில்லை. இதனால் அங்கேயே அவர் 6 மாதங்கள் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இறுதியில் 2025 மார்ச் மாதம் தான் அவர் பூமி திரும்பினார். நாசாவின் மிக மூத்த விண்வெளி வீராங்கனைகளில் ஒருவரான சுனிதா வில்லியம்ஸ் 27 ஆண்டுகள் சேவையாற்றிய பிறகு ஓய்வு பெற்றுள்ளார். செவ்வாய்க்கிழமை நாசா இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடந்த டிசம்பரில் கிறிஸ்துமஸ் விடுமுறை பிறகு சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நாசா பாராட்டு இது தொடர்பாக நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் பேசுகையில், “மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் பயணங்களில் சுனிதா வில்லியம்ஸ் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார். விண்வெளி நிலையத்தில் அவரது தலைமைத்துவம், விண்வெளி ஆய்வின் எதிர்காலத்திற்கு ஒரு புதிய திசையை வகுத்தது. மேலும், அவரது பங்களிப்பால் தான் ஸ்பேஸ் சுற்றுலாவும் ஆரம்பித்தது அவரது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள், சந்திரனுக்கான ஆர்ட்டெமிஸ் பயணங்களுக்கும், செவ்வாய்க் கிரகத்தை நோக்கிய ஆய்வுகளுக்கும் அஸ்திவாரமிட்டன. அவரது அரிய சாதனைகள் அடுத்த தலைமுறையினரைப் பெரிய கனவுகளைக் காணவும், எல்லைகளைத் தாண்டவும் எப்போதும் ஊக்குவிக்கும். உங்கள் ஓய்வுக்கு வாழ்த்துக்கள், நாசாவுக்கும் நமது தேசத்திற்கும் நீங்கள் ஆற்றிய சேவைக்கு நன்றி” என்றார்.















