
டெஹ்ரான், ஜூலை 17- வளைகுடா நாடுகளின் உள்கட்டமைப்புகளை அழித்து தரைமட்டமாக்குவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் அமெரிக்கா, ஈரான் இடையே போர் நடைபெற்று வந்தது. பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு கடந்த ஜூன் 17ம் தேதி இரு நாடுகள் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்பிறகு தங்கள் எல்லையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல வேண்டும் என்று ஈரான் ராணுவம் கட்டுப்பாடு விதித்தது. இதை மீறி ஓமன் கடல் வழியாக சென்ற எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதன்காரணமாக தற்காலிக அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 8-ம் தேதி அறிவித்தார். இதன்பிறகு அமெரிக்கா, ஈரான் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியின் இரு புறத்தையும் அமெரிக்க போர்க் கப்பல்கள் முற்றுகையிட்டு உள்ளன. ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் அந்நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ராணுவ தளங்கள், ஏவுகணை, ட்ரோன் உற்பத்தி ஆலைகள், துறைமுக பகுதிகளை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் நேற்று குண்டுமழை பொழிந்தன. அமெரிக்க தாக்குதலில் ஈரானில் இதுவரை 35 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கரீபியன் பகுதி நாடான கோர்சாவை சேர்ந்த எண்ணெய் கப்பல் நேற்று ஈரானின் கார்க் தீவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலின் இன்ஜின் பகுதியை குறிவைத்து அமெரிக்க போர் விமானம், ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதனால் அந்த கப்பல் நடுவழியில் நின்றது. மேலும் ஈரான் துறைமுகம் நோக்கி சென்ற பல்வேறு எண்ணெய் கப்பல்களை அமெரிக்க போர்க்கப்பல்கள் இடைமறித்து திருப்பி அனுப்பின. அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்தை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசியது. மேலும் ஜோர்டான், பஹ்ரைன், இராக், குவைத் நாடுகளில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.














