
சென்னை: அக். 29-
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) நடைபெறவுள்ளது. இது தொடர்பாக விவாதிக்க, தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில், 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான அனைத்துக் கட்சி கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியானது நடைபெறவுள்ளது. ஏற்கனவே பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.
SIR என்ற பெயரிலான இந்த செயல்முறை மூலம் போலி வாக்காளர்கள், இரட்டை வாக்குரிமை கொண்டிருந்தவர்கள், மரணமடைந்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து ஊடுருவியவர்கள் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பீகாரில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் தான் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்கள் உட்பட 12 மாநிலங்களில் SIR மேற்கொள்ளப்படலாம் என தெரிகிறது. இதற்கான படிவங்களை அச்சிடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மாநில அளவிலான அனைத்துக் கட்சி கூட்டம் இன்று மாலை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற உள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான பாஜக, இந்திய தேசிய காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி ஆகிய 6 கட்சிகளுக்கும், அங்கீகரிப்பட்ட மாநில கட்சிகளான திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 6 கட்சிகள் என மொத்தம் 12 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பல்வேறு சந்தேங்கள் மற்றும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இது போன்று மாவட்ட அளவில் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையிலும் அப்பகுதியை சேர்ந்த அனைத்து கட்சி கூட்டம் வரும் நாட்கள் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.















