
வாஷிங்டன்: ஜனவரி 19-
ஆலங்கட்டி மழை, கனமழை போன்றவற்றை நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். ஆனால் வானத்திலிருந்து மீன்கள் மழையாக விழுவது என்றால் அது மிகவும் ஆச்சரியமான ஒன்றாகத் தான் இருக்கும். இப்படிப்பட்ட விசித்திரமான இயற்கை நிகழ்வு உலகின் பல பகுதிகளில் நடந்துள்ளது. நம்முடைய கேரளா, தெலுங்கானாவில் நடந்துள்ளது.. சமீபத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டெக்சார்கானா நகரில் வானத்திலிருந்து மீன்கள் விழுந்த சம்பவம் அம்மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. உண்மையிலேயே வானத்தில் மீன்கள் உள்ளனவா? மீன்கள் வானத்திலிருந்து நேரடியாக உருவாகி விழுவதில்லை. ஏரிகள், குளங்கள், நதிகள் அல்லது கடல்களின் மேல் சக்திவாய்ந்த காற்று சுழல்கள் உருவாகும் போது, அதில் இருக்கும் சிறிய மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் காற்றுக்குள் இழுத்துச் செல்லப்படுகின்றன.
மீன்கள் வானில் இந்த காற்று சுழல்கள் சில நேரங்களில் மிகவும் வலிமையானதாக இருக்கும். இதுபோன்ற நேரங்களில்தான் மீன்கள் நீரிலிருந்து மேலே தூக்கப்பட்டு, சில தூரம் பயணம் செய்து, காற்றின் வேகம் குறைந்ததும் கீழே விழுகின்றன. இதற்கு தான் மீன் மழை என்கிறார்கள்.. சில சமயங்களில் மீன்களுடன் தவளைகள், பாம்புகள், நண்டுகள் போன்ற சின்ன சின்ன விலங்குகளும் மழையுடன் சேர்ந்து விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன… இதுபோன்ற நிகழ்வுகளை பொதுவாக ‘விலங்கு மழை’ என்று அழைக்கிறார்கள். கலிபோர்னியா, வடமேற்கு சைபீரியா போன்ற பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறதாம்.. மீன் மழை இந்தியாவிலும் மீன் மழை பெய்த நிகழ்வுகள் உள்ளன. 2019ம் ஆண்டு கேரளாவில் ஒரு முறை மீன் மழை பெய்தது. அதேபோல், 2021-ல் உத்தரபிரதேசத்தின் பதோஹி மாவட்டத்திலும், 2022-ல் தெலங்கானா மாநிலத்தின் ஜக்தியால் நகரிலும் வானத்திலிருந்து மீன்கள் விழுந்தன.பெரும்பாலும் இத்தகைய சம்பவங்கள் பருவமழை காலத்தில் தான் நடைபெறுகின்றன.
















