
புதுடெல்லி: ஜனவரி 19-
அவ்வளவு கூட்டத்தினூடே ஏன் வாகனத்தை செலுத்த சொன்னீர்கள், வாகனத்தின் மேலே இருந்த உங்களுக்கு நிலைமை மோசமானது தெரியவில்லையா என தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.
இன்றைய தினம் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் அதிகாரிகள் ஏராளமான கேள்விகளை கேட்டனர். இதற்கு சில கேள்விகளுக்கு விஜய் பதிலளித்ததாக சொல்லப்படுகிறது.
அரை மணி நேரம் முன்னதாகவே சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜரான விஜய்யிடம், “அவ்வளவு கூட்டத்தினூடே ஏன் வாகனத்தை செலுத்த சொன்னீர்கள், வாகனத்தின் மேலே இருந்த உங்களுக்கு நிலைமை மோசமானது தெரியவில்லையா? அபாயத்தை தடுக்க என்ன முயற்சி எடுத்தீர்கள் 7 மணி நேரம் தாமதமாக சென்றது ஏன் என்றும் நிலைமை மோசமடைந்த நிலையிலும் ஏன் பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து பேசினீர்கள், கண் எதிரே கூட்ட நெரிசலை பார்க்கவில்லையா? என சிபிஐ அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தனர். சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விஜய்யின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த குற்றப்பத்திரிகை தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி 2-ஆவது வாரத்தில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் சிபிஐ கேட்ட கூட்ட நெரிசல் குறித்த கேள்விகளுக்கு விஜய், தான் தமிழக போலீஸை நம்பியதாக தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில், தவெக தலைவர் விஜய் இன்று இரண்டாவது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதற்காக நேற்று தனி விமானத்தில் டெல்லி சென்றார். கரூரில் விஜய் பங்கேற்ற பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, சிபிஐ விசாரித்து வருகிறது. முன்னதாக, ஜனவரி 12 அன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை நடந்தது. 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு, அவரது பதில்கள் எழுத்துபூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டன. விஜய் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் தகவல் வெளியானது. விஜய்யின் கோரிக்கையை ஏற்று, பொங்கல் விடுமுறைக்குப் பின் ஜனவரி 19 அன்று மீண்டும் ஆஜராக சிபிஐ கூறியது. அதன்படி நேற்று மாலை 4 மணிக்கு டெல்லி புறப்பட்ட அவர், இன்று காலை 10.30 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். விசாரணை முடிந்து இன்று இரவு அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.
இவ்வழக்கில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர். நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் 20 மணி நேரம் விசாரிக்கப்பட்டனர். கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார் ஆகியோரிடமும் இன்றும் இரண்டாம் கட்ட விசாரணை நடைபெறலாம். விஜய்யின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியையும் விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. இவர்தான் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில் திட்டங்களை வகுத்துக் கொடுத்ததாகவும், அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டுவிட்டு வாகனத்தை கூட்டத்தினூடே செல்லுமாறும் இவர்தான் டிரைவரிடம் அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.














