
புதுடெல்லி: ஏப்ரல் 27 –
தமிழகத்தின் கல்பாக்கத்தில் உள்ள அதிவேக ஈனுலை, அதன்செயல்பாட்டின் தொடக்க நிலையை எட்டியுள்ளது. பாரதத்தின் அணுசக்தி பயணத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் ஆகும். இந்த முக்கியசாதனையின் மூலம் நமது அணு சக்தி விஞ்ஞானிகள் பாரதத்தைப் பெருமைப்படுத்தி உள்ளனர் என்று ‘மன் கீ பாத்’ உரையில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
பிரதமர் மோடி நேற்று நிகழ்த்திய 133-வது ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில் கூறியதாவது: இந்தியா எப்போதும் அறிவியலை நாட்டின் வளர்ச்சியுடன் இணைத்தே பார்த்து வருகிறது. அந்த தொலைநோக்குப் பார்வையுடன்தான் நமது விஞ்ஞானிகள் விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். அவர்களது முயற்சியால்தான் இத்திட்டம் தேசக் கட்டமைப்பில் முக்கியப் பங்காற்றி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு, நமது அணுசக்தி விஞ்ஞானிகள் மற்றொரு முக்கிய சாதனையின் மூலம் பாரதத்தைப் பெருமைப்படுத்தினர். தமிழகத்தின் கல்பாக்கத்தில் உள்ள அதிவேக ஈனுலை, அதன் செயல்பாட்டின் தொடக்க நிலையான ‘கிரிட்டிக்காலிட்டி’ நிலையை எட்டியுள்ளது. பாரதத்தின் அணுசக்தி பயணத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் ஆகும். இந்த அணு உலை முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல, இன்று பாரதத்தின் வளர்ச்சிப் பாதையில் காற்றாலை மின் உற்பத்தி ஒரு புதிய வரலாற்றை எழுதி வருகிறது. சமீபத்தில் காற்றாலை மின் உற்பத்தி துறையிலும் பாரதம் ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. தற்போது நமது நாட்டின் காற்று மின் உற்பத்தித் திறன் 56 கிகாவாட்டைத் தாண்டியுள்ளது. இதன் மூலம், காற்று எரிசக்தி திறனில் பாரதம் உலக அளவில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.மே மாதம் ஒரு மங்களகரமான நிகழ்வுடன் தொடங்குகிறது. இன்னும் சில நாட்களில் நாம் புத்த பூர்ணிமாவைக் கொண்டாட உள்ளோம். இதற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். கவுதம புத்தரின் வாழ்க்கைச் செய்திகள் இன்றும் நமக்கு பொருத்தமானதாக உள்ளன. அமைதி என்பது நமக்குள் இருந்தே தொடங்குகிறது என்று அவர் போதித்தார். தன்னைத் தானே வெல்வதே மிகப்பெரிய வெற்றி என்று அவர் கூறினார்.


















