விளம்பரத்திற்காக ரூ. 56 கோடி செலவு

பெங்களூர்: ஆகஸ்ட் 24-
கர்நாடகா அரசு தயாரிக்கும் மைசூர் சாண்டல் சோப் சர்ச்சை இன்னும் ஓயவில்லை. மைசூர் சாண்டல் சோப் விளம்பர தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டதற்கு அந்த மாநிலத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் நடிகை தமன்னாவுக்கு ரூ.6.27 கோடி சம்பளம் வழங்கியதுடன், மொத்தம் ரூ.56 கோடி விளம்பரத்திற்காக செலவிடப்பட்டுள்ளது என்று கர்நாடகா அரசு சட்டமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருப்பது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஆளும் காங்கிரஸ் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் ஆர்எஸ்எஸ் பாடலை பாடியது சர்ச்சையானது. டிகே சிவக்குமார் ஏற்கனவே பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியோருடன் நெருக்கமாக இருப்பதாக விமர்சனம் உள்ளது. இது கர்நாடகா அரசியலில் அப்போதே சர்ச்சையை கிளப்பியது. “கர்நாடகா அரசுக்கு சொந்தமான ஒரு சோப்புக்கு கர்நாடகாவில் இருந்த எந்த நடிகையும் கிடைக்கவில்லையா. எதற்காக வட மாநில நடிகையை விளம்பர தூதராக நியமித்து கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டும்.” என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. ரூ. 56 கோடி செலவு இந்நிலையில் நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் பாஜக எம்எல்ஏ சுனில் குமார், “மைசூர் சாண்டல் சோப் விளம்பரத்திற்கான செலவு” குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கர்நாடகா அரசு, “நடிகை தமன்னாவுக்கு ரூ.6.27 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களில் மைசூர் சாண்டல் சோப் விளம்பரத்திற்காக ரூ48.88 செலவிடப்பட்டுள்ளது. மேலும் நடிகை ஐஷானி ஷெட்டிக்கு ரூ.15 லட்சம், சமூகவலைளதங்களில் ரீல்ஸ் விளம்பரத்திற்காக ரூ.62.87 லட்சம் என்று மொத்தம் ரூ.56 கோடிக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.” என்று அந்த மாநில அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.