
காபூல், டிச. 18- இந்தியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரை நிறுத்தும் பணிகளை ஆரம்பிக்கிறது. சிந்து நதி நீரை இந்தியா தனது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ள நிலையில், அதேபோல பாகிஸ்தானுக்கு செல்லும் குனார் நதி நீரை ஆப்கானிஸ்தான் தனது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இது பாகிஸ்தானில் மிக மோசமான வறட்சியை ஏற்படுத்தும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. அப்போது சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறியது. அதாவது பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா தனது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. சிந்து நதியை இந்தியா முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கும்போது பாகிஸ்தானில் மிக மோசமான நீர் பற்றாக்குறை ஏற்படும்.ஆப்கானிஸ்தான் இதற்கிடையே இந்தியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரை நிறுத்தும் பணிகளை ஆரம்பிக்கிறது. தனது குனார் நதி நீர் வழித்தடத் திட்டத்தைச் செயல்படுத்தத் தாலிபான் அரசு முடிவு செய்துள்ளது. திட்டமிட்டபடி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் பாகிஸ்தானில் மிக மோசமான ஒரு தண்ணீர் நெருக்கடி ஏற்படும். பாகிஸ்தானுக்குச் செல்லும் குனார் நதி நீரைத் தனது நங்கர்ஹார் பகுதிக்குத் திருப்பிவிடுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதிக்கு வரும் நீர்வரத்துக் கணிசமாகக் குறையும். ஏற்கனவே ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இது நிலைமையை மேலும் மோசமாக்கும்.. ஆப்கானிஸ்தான் டைம்ஸ் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஆப்கன் பிரதமர் அலுவலகத்தின் பொருளாதாரக் குழுவின் தொழில்நுட்பக் குழு கூட்டத்தில், குனார் நதி நீரை நங்கர்ஹாரில் உள்ள தாருண்டா அணைக்குத் திருப்பி விடும் திட்டம் விவாதிக்கப்பட்டது. விவாதங்களுக்குப் பிறகு தாலிபான் அரசு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இறுதி ரிப்போர்ட்டிற்காக இந்தத் திட்டம் இப்போது பொருளாதாரக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹாரில் நீர் பற்றாக்குறை நிலவும் நிலையில், அங்கு விவசாயிகளின் நீர் தேவையை இது பூர்த்தி செய்யும். அதேநேரம் முன்கூட்டியே சொன்னது போல இது பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவுக்கு வரும் நீர்வரத்தை பாதிக்கும்.


















