
புதுடெல்லி, ஜூன் 27- தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், அந்நாட்டுடன் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளன. சுமார் 14,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தியாவில் அதன் தாக்கம் எதிரொலிக்கக்கூடும் என்று தொழில் துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து எட்மி இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் நிறுவனத்தின் மறுகாப்பீடு மற்றும் உலகளாவிய இயற்கை வளங்கள் பிரிவின் நிர்வாக இயக்குநர் குணால் கன்னா கூறியதாவது: மிகக் குறுகிய காலத்தில் இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் முக்கிய நாடாக வெனிசுலா உருவெடுத்துள்ளது.
எனவே, அந்நாட்டின் ஏற்றுமதி உள்கட்டமைப்பில் ஏற்படும் எந்தவொரு பாதிப்பும் சர்வதேச எல்லைகளைத் தாண்டி இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நிலநடுக்கத்தால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நேரடிப் பாதிப்பு ஏற்படாவிட்டாலும், மின் தடை, போக்குவரத்துச் துண்டிப்பு மற்றும் துறைமுகக் கட்டுப்பாடுகள் காரணமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி பல நாட்களுக்குத் தாமதமாகலாம். வெனிசுலாவின் முக்கிய சரக்கு போக்குவரத்து நுழைவாயிலான ‘லா குவைரா’ துறைமுகப் பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால்,
கப்பல் கட்டணங்கள், தாமதக் கட்டணங்கள் மற்றும் கடல்சார் காப்பீட்டு பிரீமியம் ஆகியவை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. இதுவரை அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் சார்ந்த அபாயங்களை மட்டுமே கணக்கில் கொண்டு காப்பீட்டுக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இனி இயற்கை பேரிடர் அபாயங்களையும் காப்பீட்டுத் துறை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதனால், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு குணால் கண்ணா கூறினார். இந்த மாத தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி, வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்தினார்.



















