
கரூர்: நவ. 1-
கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கிய விஜய் சமீபத்தில் அவர்களை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து ஆறுதல் கூறி பத்திரமாக அனுப்பி வைத்தார். எனினும், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் 2 வது நாளாக அதிகாரிகள் வேலுச்சாமிபுரத்தில் தங்களது விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்.
கரூரில் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சார செய்ய சென்றபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் இந்தியாவையே நிலைகுலைய வைத்தது.
இந்த வழக்கை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, சிபிஐ கையில் எடுத்துள்ளது. அதன்படி வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்… கடந்த 17ம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சொந்த ஊருக்குச் சென்றிருந்த 7 பேர் கொண்ட சிபிஐ குழுவினர், 11 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் கரூருக்கு வந்துள்ளனர். அவர்கள் தங்களுக்குள் ஆலோசனைகள் நடத்திய பிறகு, சம்பவம் குறித்துக் கள ஆய்வு மற்றும் ஆழமான விசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தவகையில் இது விசாரணையின் முதல் கள ஆய்வாக அமைந்துள்ளது. நேற்று காலை சாட்சியங்களை, அலுவலகத்திற்கு வரவழைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பிறகு சாட்சியங்களில் 3 பேரை மட்டும், சம்பவ இடத்துக்கே அழைத்து வந்து நேரடியாக விசாரணை செய்தனர்.
கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணிடம் நேற்று மதியம் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். சம்மன் – நேரில் ஆஜர் அதேபோல ஏற்கனவே வேலுச்சாமிபுரம் பகுதியிலுள்ள பொதுமக்கள், வியாபாரிகளிடம் சாட்சியங்கள் பெறுவதற்காக சிபிஐ அதிகாரிகள் அவர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். கரூர் பிரச்சார கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்த உண்மைகள், சூழ்நிலைகள் குறித்து ஏதேனும் தெரிந்திருந்தால், நேரில் ஆஜராகும்படியும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 4 பேர் நேற்றைய தினம் விசாரணைக்கு ஆஜரானார்கள். வேலுச்சாமிபுரத்தில் உள்ள உள்ளூர் டீக்கடையிலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.. “சம்பவத்தை நேரில் பார்த்தீர்களா? என்ன நடந்தது?” என்றெல்லாம் கேள்விகளை கேட்டதாக தெரிகிறது. அதற்கு பொதுமக்களும், டீக்கடை ஓனர்களும், கூட்டத்தின் அளவு, போக்குவரத்து நிலை, போலீஸ் ஏற்பாடுகள் போன்றவை குறித்து கூறியதாக சொல்லப்படுகிறது.















