வைபவ் சூர்யவன்ஷி மெகா உலக சாதனை

லண்டன், ஜூலை 9- 2025 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி இருந்த வைபவ் சூர்யவன்ஷி அதன் பிறகு அதே போல் ஆடுவாரா? அதே ஃபார்மை அவரால் தொடர முடியுமா? என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. அதற்கு பதில் சொல்லும் வகையில் இந்தியா U-19 மற்றும் இங்கிலாந்து U-19 அணிகளுக்கு இடையே அண்மையில் முடிந்த யூத் ஒருநாள் தொடரில் (Youth ODI series) வைபவ் சூர்யவன்ஷி பல்வேறு சாதனைகளை முறியடித்து இருக்கிறார். இந்த தொடரில் இந்திய இளம் அணி ஆயுஷ் மாத்ரே தலைமையில் 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதில், 14 வயதே ஆன சூர்யவன்ஷி தொடரின் நட்சத்திர வீரராக ஜொலித்தார். ஐந்து போட்டிகளில் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, மொத்தம் 355 ரன்கள் குவித்து அசத்தினார். 71 என்ற அபார சராசரியுடனும், 174.01 என்ற நம்பமுடியாத ஸ்ட்ரைக் ரேட்டுடனும் அவர் ரன்களைக் குவித்தார். இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதமும் அடங்கும். யூத் ஒருநாள் தொடர் வரலாற்றில், இருதரப்பு ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் இது ஐந்தாவது அதிகபட்சமாகும். தொடக்க ஆட்டக்காரர்களில் இது இரண்டாவது சிறந்த சாதனையாகும்.