ஹெச்1பி விசா விவகாரம்; டிரம்ப்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் அனுமதி

வாஷிங்டன், டிச. 25- ஹெச்1பி விசா பெறுவதற்காக அதிபர் டிரம்ப் விதித்த கட்டுப்பாடுகளை தொடர அமெரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இது இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து குடியேற்ற விதிகளையும், விசா நடைமுறைகளையும் கடுமையாக்கினார். குறிப்பாக, வெளிநாட்டு பணியாளர்களால், அமெரிக்கர்கள் வேலை இழப்பதாகக் கூறி, ஹெச்1பி விசாவில் பல்வேறு கெடுபிடிகளை விதித்தார். அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரியும் திறன்​வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசாவுக்கான கட்டணத்தை, 89 லட்சம் ரூபாயாக உயர்த்தினார். இதனிடையே, டிரம்ப்பின் இந்த முடிவை எதிர்த்து அமெரிக்க வர்த்தக சபை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, ஹெச்1பி விசாவுக்கான கட்டணத்தை உயர்த்திய அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு அனுமதியளித்துள்ளார். ஹெச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்க அரசு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே ஆணை பிறப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் அதிபருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, அமெரிக்க வர்த்தக சபையின் வாதத்தை நீதிபதி நிராகரித்தார். நீதிமன்ற தீர்ப்பு குறித்து அமெரிக்க வர்த்தக சபை தரப்பில் கூறுகையில், ‘நீதிபதியின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஹெச்1பி விசா விவகாரத்தில் காங்கிரஸ் நோக்கத்தின்படி செயல்பட, சட்டப்பூர்வமான வழிகளை ஆராய்வோம்,’ எனக் கூறினார்.