10 மாநிலங்களில் கனமழை: நிலச்சரிவு அபாய எச்சரிக்கை

புதுடெல்லி: ஆக. 6-
10 மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது, அதோடு நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. குறிப்பாக உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் மழை, வெள்ளத்தில் தாராலி என்ற கிராமத்தின் பெரும்பகுதி அடித்துச் செல்லப்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் மாயமான இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், 10 வட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. உத்தராகண்ட், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரபிரதேசம் (வடகிழக்கில் மட்டும்), கேரளா, கர்நாடகா(சில பகுதிகள் மட்டும்), ஒடிஷா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கனமழை கொட்டும் என்று கூறி உள்ளது.
இன்று காலை 5.30 நிலவரப்படி உத்தராகண்டில் நாட்டிலேயே அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. அங்குள்ள மால்தேவ்தா(174 மிமீ). பாஜ்பூர்(166மிமீ), நரேந்திரநகர் (148.5மிமீ), கனோய் கங்கோலி(147 மிமீ), சுல்தான் பட்டி (144 மிமீ) ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளது.மழையின் காரணமாக வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. பாதிக்கப்பட்ட மாநிலங்களில் அதிகாரிகள் விழிப்புடன் இருக்கமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.