
லண்டன், ஜூலை 11- கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 6-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 22-ம் நிலை வீரரான இத்தாலியின் ஃபிளாவியோ கோபோலியுடன் மோதினார்.
3 மணி நேரம் 11 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-7 (6-8), 6-2, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
விம்பிள்டன் தொடரில் ஜோகோவிச் அரை இறுதிக்கு முன்னேறுவது இது 14-வது முறையாகும். இதன் மூலம் விம்பிள்டன் வரலாற்றில் அதிக முறை அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்த சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரரின் (13-வது முறை) சாதனையை முறியடித்தார் 38 வயதான ஜோகோவிச். அரை இறுதி சுற்றில், முதல் நிலை வீரரான இத்தாலி யின் ஜன்னிக் சின்னருடன் பலப்பரீட்சை நடத்துகிறார். ஜன்னிக் சின்னர், கால் இறுதி சுற்றில் 10-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டனை 7-6 (7-2), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். ஜன்னிக் சின்னருக்கு எதிராக கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களில் ஜோகோவிச் தோல்வி அடைந்துள்ளார். இதில் கடந்த மாதம் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் அரை இறுதி ஆட்டமும் அடங்கும். எனினும் விம்பிள்டன் தொடரில் 2023-ம் ஆண்டு அரை இறுதி சுற்றிலும், 2022-ம் ஆண்டு கால் இறுதி சுற்றிலும் ஜன்னிக் சின்னரை ஜோகோவிச் தோற்கடித்துள்ளார்.