
சென்னை: அக். 23-
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை 15 அணைகள், 1,522 ஏரிகள் நிரம்பி உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசுத் துறைகள் மும்முரமாக இறங்கி உள்ளன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்.16-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 இடங்களில் அதி கனமழையும், 23 இடங்களில் மிக கனமழை, 53 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
இதனால் அணைகள், ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கெனவே நிரம்பியுள்ள நீர்நிலைகளுக்கு வரும் தண்ணீர் உபரி நீராக அப்படியே வெளியேற்றப்படுகிறது. உபரிநீர் வெளியேறும் நீர்நிலைகளை உன்னிப்பாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே அணைகள், ஏரிகளில் உள்ள நீர் இருப்பு குறித்து நீர்வள ஆதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மண்டலங்களில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் மொத்த கொள்ளளவு 224 டிஎம்சி (2.24 லட்சம் மில்லியன் கன அடி). நேற்றைய நிலவரப்படி 196 டிஎம்சி (87.77 சதவீதம்) நீர் இருப்பு உள்ளது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் மொத்தம் 14,141 ஏரிகள் உள்ளன. இவற்றில் 1,522 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. அவற்றில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 390 குளங்கள் நிரம்பியுள்ளன. 77 முதல் 99 சதவீதம் வரை 1,832 ஏரிகளும், 51 முதல் 75 சதவீதம் வரை 1,842 ஏரிகளும் நிரம்பியுள்ளன. அதேநேரம் 620 குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.
சென்னை மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய்க்கண்டிகை, வீராணம் ஆகிய ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13,222 மில்லியன் கன அடி. நேற்றைய நிலவரப்படி நீர் இருப்பு 9,986 மில்லியன் கன அடியாக (75.53 சதவீதம்) உள்ளது. இதே தேதியில் கடந்த ஆண்டு நீர் இருப்பு 6,105 மில்லியன் கன அடியாக இருந்தது. மேலும், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகியவற்றில் முன்கூட்டியே வெள்ள நீர் திறக்கப்பட்டு போதுமான இடைவெளி பராமரிக்கப்பட்டு வரு வதால், மிக கன மழை பெய்தாலும், வெள்ள நீர் திறப்பின் அளவு மட்டுப்படுத்தப்பட்டு அடையாறு மற்றும் கொசஸ்தலை ஆற்றில் பாதுகாப்பாக கடலைச் சென்றடையும். எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு நீர்வள ஆதாரத் துறை தெரிவித்துள்ளது.















