2 மாதத்தில் 145.7 டி.எம்.சி., காவிரி நீர் வழங்கிய கர்நாடகம்

சென்னை: ஆக. 4-
கர்நாடகாவில் கொட்டிய தென்மேற்கு பருவமழையால், தமிழகத்திற்கு இரண்டு மாதங்களில், 145.7 டி.எம்.சி., நீர் கிடைத்துள்ளது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடகா வழங்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில், ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம் நீர் வழங்கும் தவணை காலம் துவங்கும். அதன்படி, கடந்த ஜூன் மாதம், 9.19 டி.எம்.சி., நீரை கர்நாடகா வழங்க வேண்டும்.
கர்நாடகாவில் முன்கூட்டியே இந்த ஆண்டு மே மாதம், தென்மேற்கு பருவமழை துவங்கியது.
ஜூனில் கனமழை கொட்டி தீர்த்ததால், அங்குள்ள அணைகள் நிரம்பின. இதனால், தமிழகத்திற்கு 42.2 டி.எம்.சி., நீர் கிடைத்தது.
இது ஒதுக்கீட்டு அளவை விட, 33 டி.எம்.சி., அதிகம். ஜூலையில், 31.2 டி.எம்.சி., நீர் திறக்க வேண்டும். கனமழை காரணமாக, கர்நாடகா அணைகளில் இருந்து அதிகப்படியான உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால், தமிழகத்திற்கு 103.5 டி.எம்.சி., காவிரி நீர் கிடைத்தது. மாத ஒதுக்கீட்டு அளவை விட, 72.3 டி.எம்.சி., நீர் கூடுதலாக கிடைத்தது. இரண்டு மாதங்களில் 40.4 டி.எம்.சி.,க்கு பதிலாக, 145.7 டி.எம்.சி., நீர் கிடைத்துள்ளது. அதாவது, கூடுதலாக 105.3 டி.எம்.சி., நீர், பிலிகுண்டுலு நீரளவை தளத்தை கடந்து தமிழகம் வந்துள்ளது.