
மெக்கே: ஆக.22-ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெக்கே நகரில் இன்று நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகின்றன. கெய்ன்ஸ் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அந்த ஆட்டத்தில் 297 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியானது கேசவ் மகராஜின் சுழலில் சிக்கி 198 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை சந்தித்து இருந்தது. இந்நிலையில் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் இன்று மோதுகின்றன. 10 காலை 10 மணிக்கு குயின்ஸ்லாந்தின் மெக்கே நகரில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் நேரலை செய்கிறது.இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் ஆஸ்திரேலிய அணி தொடரை இழக்க நேரிடும். அந்த அணி கடைசியாக விளையாடிய 7 ஒருநாள் போட்டிகளில் 6-ல் தோல்விகளை சந்தித்துள்ளது.இதில் இருந்து மீண்டு வருவதற்கான வழிகளை மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கண்டறியக்கூடும். அதேவேளையில் தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 5-வது முறையாக தொடரை வெல்லும்.