
அகமதாபாத், பிப். 12- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி 2-வது சூப்பர் ஓவரில் போராடி வெற்றி பெற்றது. அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று காலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரும் கேப்டனுமான எய்டன் மார்க்ரம் 5 ரன்களில் ஃபசல்ஹக் ஃபரூக்கி பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ரியான் ரிக்கெல்டன், குயிண்டன் டி காக்குடன் இணைய பவர்பிளேவில் 43 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் பின்னர் இந்த ஜோடி ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. இதனால் 10.2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 100 ரன்களை எட்டியது. குயிண்டன் டி காக் 34 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் தனது 19-வது அரை சதத்தையும், ரியான் ரிக்கெல்டன் 23 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் தனது 4-வது அரை சதத்தையும் விளாசினர். இந்த ஜோடியின் அதிரடியால் தென் ஆப்பிரிக்க அணி 210 முதல் 220 ரன்கள் வரை குவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்கள் இருவரையும் 13-வது ஓவரை வீசிய ரஷித் கான் ஆட்டமிழக்கச் செய்தார். குயிண்டன் டி காக் 41 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்களும், ரியான் ரிக்கெல்டன் 28 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 61 ரன்களும் விளாசிய நிலையில் ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் குவித்தது. ரியான் ரிக்கெல்டன் ஆட்டமிழந்தபோது ஸ்கோர் 13 ஓவர்களில் 127 ஆக இருந்தது. இதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் ரன் குவிப்பை வேகம் குறைந்த பந்துகளை வீசி ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் வெகுவாக கட்டுப்படுத்தினர். கடைசி 7 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 60 ரன்கள் சேர்த்தது. டெவால்ட் பிரேவிஸ் 19 பந்துகளில், 23 ரன்களும், டேவிட் மில்லர் 15 பந்துகளில், 20 ரன்களும், மார்கோ யான்சன் 7 பந்துகளில் 16 ரன்களும் சேர்த்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். ரஷித் கான் 4 ஓவர்களை வீசி 28 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். 188 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 16 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் குவித்தது. தனது 13-வது அரை சதத்தை அடித்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 42 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் விளாசிய நிலையில் கேசவ் மகாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். இப்ராகிம் ஸத்ரன் 12, குல்பாதின் நயீப் 0, செடிகுல்லா அடல் 0, டார்விஷ் ரசூலி 15, முகமது நபி 5 ரன்களில் வெளியேறினர்.




















