
போபால்: மே 25-
நடிகை ட்விஷா சர்மாவின் உடலில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் நேற்று 2-வது பிரேதப் பரிசோதனையை நடத்தினர்.
கடந்த மே 12ம் தேதி ம.பி.யின் போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் நடிகை ட்விஷா சர்மா (33) தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ட்விஷாவின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.
அவர்களின் புகாரின் பேரில் வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாக ட்விஷாவின் கணவரும் வழக்கறிஞருமான சமர்த் சிங் மற்றும் அவரது மாமியார் கிரிபாலா சிங் (முன்னாள் மாவட்ட நீதிபதி) ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவாக இருந்த சமர்த் சிங் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, 7 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, போபாலில் நடத்தப்பட்ட முதல் பிரேதப் பரிசோதனையில் பல குறைபாடுகள் இருப்பதாக ட்விஷாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
குறிப்பாக, ”ட்விஷாவின் இடது கையில் இருந்த காயங்கள், கழுத்து பகுதியில் இருந்த தழும்புகள் சரியாக ஆய்வு செய்யப்படவில்லை. இது தற்கொலையா அல்லது கொலையா என்பதைக் கண்டறிய விரிவான தடயவியல், நச்சுயியல் சோதனைகள் நடத்தவில்லை” என குற்றம்சாட்டினர்.


















